அடிப்படை வசதியே இல்லாத முண்டகக்கண்ணியம்மன் கோயில் ரயில் நிலையம்: கழிவறை மூடல்; நகரும் படிக்கட்டுகள் இல்லை; பயணிகள் கடும் அவதி

சென்னையில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள் சென்னைக்குள் பல்வேறு பகுதிக்கு செல்வதற்காக பறக்கும் ரயிலை பயன்படுத்தி வருகின்றனர். பறக்கும் ரயில் சேவை சென்னையில் 1997ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இவற்றில் கடற்கரை- வேளச்சேரி (தற்போது சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து) வரை தினசரி 80க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் 18 ரயில் நிலையங்கள் உள்ளன. இவற்றில் இரவு 9 மணிக்கு மேல் செல்ல பெண்கள் தயங்குகின்றனர்.

சமூக விரோதிகள் சிலர் ரயில் நிலையங்களில் உள்ளே மது அருந்துவது, புகைபிடிப்பது போன்ற செயலில் ஈடுபடுவதால் இரவில் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். மேலும் பல ரயில் நிலையங்களில் கட்டிடங்கள் பராமரிப்பு இன்றி பாழடைந்த நிலையில் உள்ளன. குறிப்பாக மயிலாப்பூர் முண்டககண்ணியம்மன் கோயில் ரயில் நிலையம் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் பயணிகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு மிகவும் மோசமாக உள்ளது. இந்த ரயில் நிலையம் 18வது பறக்கும் ரயில் நிலையமாக செயல்பட்டு வருகிறது. 2002ம் ஆண்டு இந்த நிலையத்தின் வேலை தொடங்கி, 2014 முதல் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

இந்த ரயில் நிலையம் பக்கிங்ஹாம் கால்வாய் கரையில் கட்டப்பட்ட ஒரு உயரமான ரயில் நிலையம். பயணிகள் நிலையத்திற்கு வந்து செல்ல ஒரே ஒரு நுழைவாயில் மட்டுமே ரயில்வே நிர்வாகம் ஏற்படுத்தியது. இது பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி பயணிகளுக்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக கழிவறை பூட்டப்பட்டு கிடக்கிறது. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தக்கூடிய கழிவறை பராமரிப்பு இல்லாமல் துர்நாற்றத்துடன் அருவருப்பான நிலையில் உள்ளது. இதனால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இது ஒரு புறம் இருக்க ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் வசதியும் இல்லை. லிப்ட் வசதி இருந்து அது பயன்படுத்த முடியாத அளவில் உள்ளது.

2 தளம் கொண்ட இந்த ரயில் நிலையத்திற்கு முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் என அனைவரும் படிக்கட்டில் சிரமப்பட்டு ஏறுவதால் பல இன்னலைகளை சந்திக்கின்றனர். 1ம் தளத்திற்கு செல்லும் போது அங்கு செயல்படாமல் இருக்கும் லிப்ட் அருகில் சமூக விரோதிகள் சிறுநீர் கழித்துள்ளனர். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி, பயணிகள் மூக்கை மூடிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் தரைத்தளத்தில் இருந்து 2வது தளத்திற்கு செல்லும் வழியில் ஆங்காங்கே எச்சில் கறை, பான்பராக் கறை என பார்ப்பதற்கே அருவருப்பாக உள்ளது. ரயில் நிலையங்களில் இரவு நேரங்களில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என பெண் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்கள் கூறுகையில், இரவு நேரங்களில் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

கழிவறைகளும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இரவு நேரங்களில் ரயில் நிலையம் அருகில் உள்ள பகுதிகளில் இருக்கும் சிலர் மது அருந்துவதற்கு இந்த இடத்தை பயன்படுத்துகின்றனர். மேலும் இந்த ரயில் நிலையத்திற்கு பிரதான சாலையில் இருந்து வரும் பாதை தனிமைப்படுத்தப்பட்டதாக உள்ளது. எனவே சிசிடிவி அமைப்பது, காவல் துறை ரோந்து பணியில் இருப்பது என பெண்கள் பாதுகாப்பை ரயில்வே நிர்வாகம் உறுதி செய்யவேண்டும் என்றனர். ரயில் நிலையங்களில் இரவு நேரங்களில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என பெண் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

* சிசிடிவி கேமரா இல்லை
ரயில் நிலையங்களில் பயணிகள் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமரா வசதி இல்லாத நிலையே தற்போது உள்ளது. ரயில்வே போலீசார் ரயிலில் மட்டுமே பயணம் மேற்கொள்கின்றனர். ரயில் நிலையங்களில் ரோந்து பணியில் போலீசார் இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதனால் இந்த ரயில் நிலையத்தை பயத்துடன்தான் இரவில் பெண் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

* பராமரிப்பு இல்லாத வளாகம்
ரயில் நிலைய வளாகம் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. குறிப்பாக ரயில் நிலைய சுவரில் செடிகள் வளர்ந்தும், சுவர்கள் விரிசலுடனும் காணப்படுகிறது. மேலும் உட்புறத்தில் சில பகுதிகளில் சுவர்கள் இடிந்த நிலையில் உள்ளது.

* மாணவர்கள் அவதி
பயணிகள் பயன்படுத்தும் குடிநீர் குழாய் சரியாக பயன்பாட்டில் இல்லை. ஒரு சில குழாய்களில் தண்ணீர் வந்தாலும் அந்த குழாய்கள் கூட சுத்தமாக இல்லை. இந்த ரயில் நிலையம் அருகில் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு படிக்கும் மாணவர்கள் பள்ளி முடிந்த உடன் ரயில் மூலமாக வீட்டுக்கு செல்கின்றனர். குடிப்பதற்கு முறையாக தண்ணீர் இல்லாமல், பயன்படுத்த கழிவறை இல்லாமல் மாணவர்கள் அவசர தேவைக்கு கூட ஏதும் பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர்.

The post அடிப்படை வசதியே இல்லாத முண்டகக்கண்ணியம்மன் கோயில் ரயில் நிலையம்: கழிவறை மூடல்; நகரும் படிக்கட்டுகள் இல்லை; பயணிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Related Stories: