தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து சென்னானூர் அகழ்வாராய்ச்சிக்கு அனுமதி வழங்கியதற்கு பாராட்டு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் அழ்வாராய்ச்சிக்கு, தமிழக அரசு அனுமதி வழங்கி, நிதி ஒதுக்கீடு செய்தமைக்கு மாவட்ட வரலாற்று ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.
தமிழகத்தின் 2024ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையை, தமிழக சட்டப்பேரவையில், தமிழக நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கடந்த 19ம் தேதி தாக்கல் செய்தார். அதில், கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் உள்பட 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ளப் படும் என அறிவித்ததற்கு கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் தலைவர் நாராயணமூர்த்தி கூறுகையில், மாவட்ட அரசு அருங்காட்சியகத்துடன் இணைந்து, வரலாற்று சிறப்பு மிக்க இடங்களையும், தொல்லியல் சார்ந்த இடங்களையும் ஆய்வு செய்து, ஆவணப்படுத்தி வருகிறோம். கடந்த ஆண்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குன்னத்தூரை அடுத்துள்ள சென்னானூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டோம். அப்பகுதியில் இதுவரை ஆராயப்படாத பாம்பாற்று கரை நாகரிகம் இருக்கும் என நம்புகிறோம்.

ஆம்பள்ளி குட்டூரில் சங்க கால செங்கல், இரும்பு உலை மற்றும் பானை ஓடுகள் கிடைத்துள்ளது. அதே ஆற்றங்கரை பகுதியில் ஆய்வு செய்தபோது, கல்லாயுதத்தின் உடைந்த பகுதி, சுடுமண் சிற்பங்கள், கருப்பு -சிவப்பு பானை ஓடுகள் மட்டுமின்றி, நூற்றுக்கணக்கான சங்க கால செங்கற்கள் கண்டறியப்பட்டது. அங்கு, நிலத்தடியில் கட்டுமானமும் இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

இவற்றை எல்லாம் அகழ்வாய்வு செய்ய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். கிருஷ்ணகிரி மாவட்ட தொல்லியல் அலுவலர் பரந்தாமனை சென்னானூர் பகுதிக்கு அழைத்துச் சென்று பார்வையிட செய்தோம். இந்த அகழ்வாய்வு பாம்பாற்று வழிப்பகுதியில் இருந்த மக்களின் நாகரிகம் பற்றிய புதிய வரலாற்று தகவல்களை தெரிவிக்கும் என நம்புகிறோம். கிருஷ்ணகிரி மாவட்டம், சென்னானூரில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்தமைக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றார்.

The post தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து சென்னானூர் அகழ்வாராய்ச்சிக்கு அனுமதி வழங்கியதற்கு பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: