போதைப்பொருள் நடமாட்டம் குறித்து ஆசிரியர்களிடம் தெரிவிக்க வேண்டும்

*மாணவ, மாணவியருக்கு டிஐஜி அறிவுரை

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் நடமாட்டம் குறித்து தெரிய வந்தால், மாணவ-மாணவிகள் தங்களது ஆசிரியர்களிடம் தெரிவிக்க வேண்டுமென, டிஐஜி அறிவுறுத்தினார்.நாமக்கல்லில் காவல்துறை சார்பில், பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற போதை எதிர்ப்பு குழு உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. ஏடிஎஸ்பி கனகேஸ்வரி வரவேற்றார். எஸ்பி ராஜேஸ்கண்ணன் முன்னிலை வகித்து பேசினார். இக்கூட்டத்தில் சேலம் சரக டிஐஜி உமா தலைமை வகித்து பேசியதாவது:

போதை பழக்கங்களால் சமுதாயத்தில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்த உலகம் இன்னும் பல 100 ஆண்டுகளுக்கு ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்றால் மாணவ-மாணவியர் ஆரோக்கியமாகவும், நல்ல பழக்க வழக்கத்துடன் இருக்க வேண்டும். மாணவ-மாணவியரின் நலனுக்காக தான், அரசாங்கம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. மாணவ-மாணவியரின் வாழ்க்கை நிலையை தீர்மானிப்பது பள்ளிகூடங்கள் தான். பள்ளிகூடங்களில் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை பொறுத்துதான், அவர்களின் வாழ்க்கை அமைகிறது. பெற்றோர்களும், ஆசிரியர்களும் தங்களின் அனுபவத்தை கொண்டு குழந்தைகளுக்கு அறிவுரை கூறுகிறார்கள். அதனை குழநத்தைகள் மதித்து நடக்க வேண்டும்.

பள்ளி பருவத்தில் கற்று கொள்வது, அடுத்த தலைமுறைக்கு முன்னுதாரணமாக விளங்கும். சமூக வலைத்தளங்களின் மூலம் கவன சிறதல்கள் ஏற்படும். நம்மை சுற்றி என்ன நடக்கிறது, நமது ஊரில் என்ன நடக்கிறது என்பதை மாணவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும். போதைப்பொருட்களுக்கு அடிமையாகக் கூடாது. போதைப்பொருட்களின் பயன்பாடு மன அழுத்தத்தை தரக்கூடியது. அது நம் வளர்ச்சிக்கு தடை கல்லாக அமைந்துவிடும்.

போதைப்பொருட்கள் குறித்து உங்களுக்கு தெரியவரும் தகவலை, உடனடியாக பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் தெரிவிக்க வேண்டும். பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள போதை ஒழிப்பு உறுப்பினர்கள் குழு கூட்டங்களில், இது பற்றி விவாதிக்க வேண்டும். போதை பழக்கத்தை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுப்பதன் மூலம், அடுத்தடுத்த குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுக்க முடியும். மேலும், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து, போதைப்பொருட்கள் எங்கிருந்து வருகிறது என்பதை கண்டறிந்து ஒழிக்க முடியும். இவ்வாறு டிஜஜி உமா பேசினாயர்.

நிகழ்ச்சியில், போதை ஒழிப்பு உறுதிமொழியை பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், காவல்துறையினர் ஏற்றுக்கொண்டனர். இதில், முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் விஜயன், டிஎஸ்பி ஆனந்தராஜ், இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன், பள்ளி தலைமை ஆசிரியர் பெரியண்ணன், உதவித் தலைமை ஆசிரியர் ராமு மற்றும் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர், ஆசிரிய, ஆசிரியைகள், பள்ளி மேலாண்மை குழுவினர் கலந்து
கொண்டனர்.

போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக மாற்றவேண்டும்

நிகழ்ச்சியில் எஸ்பி ராஜேஸ்கண்ணன் பேசுகையில், ‘நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும், போதை தடுப்பு உறுப்பினர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் அதிகபட்சம் 10 மாணவ-மாணவியர், பள்ளி ஆசிரியர், ஒரு போலீசார் இடம் பெற்றுள்ளனர். மாதந்தோறும் கூட்டம் நடத்தி போதைப்பொருட்களின் நடமாட்டம், அதன் தீமைகள் குறித்து ஆலோசிக்க வேண்டும்.

பள்ளியை சுற்றியுள்ள பகுதியில், எங்காவது போதைப்பொருட்கள் விற்பனை செய்தால், அது குறித்து குழு கூட்டத்தில் தெரிவித்தால் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள். யாருடைய பெயரும் வெளியே வராமல் பார்த்துக் கொள்ளப்படும். நாமக்கல்லை போதைப்பொருட்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற, காவல்துறை எடுக்கும் நடவடிக்கைக்கு மாணவ-மாணவியர் மற்றும் போதை தடுப்பு உறுப்பினர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,’ என்றார்.

The post போதைப்பொருள் நடமாட்டம் குறித்து ஆசிரியர்களிடம் தெரிவிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: