பந்தலூர் பகுதிகளில் கனமழைக்கு குடியிருப்பு பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டு பாதிப்பு

பந்தலூர் : பந்தலூர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக 2வது நாளாக பள்ளிக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம்,பந்தலூர் சுற்றுவட்டாரம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று பந்தலூரில் 123 மி.மீட்டர் மழையும், சேரங்கோடு 125 மி.மீ, தேவாலாவில் 56 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது குறிப்பிடதக்கதாகும்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழைக்கு பந்தலூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் வசித்துவரும் கூலித் தொழிலாளி பஞ்சவர்ணம் என்பவரது வீட்டின் பின்புறம் உள்ள மண் திட்டு இடிந்து விழுந்து வீடு சேதமானது.பந்தலூர் இன்கோ நகர் பகுதியில் காந்திமணி, மகாலட்சுமி ஆகியோர் வீட்டின் அருகே உள்ள தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து வீடு சேதமானது.
மேலும் பந்தலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் மரம் விழுந்ததில் மின்கம்பிகள் அறுந்து மின்தடை ஏற்பட்டது. பந்தலூர் மின்வாரியத்தினர் உடனடியாக மரத்தை வெட்டி அகற்றி சரி செய்தனர்.

சம்பவ இடங்களுக்கு முன்னாள் எம்எல்ஏ திராவிடமணி நேரில் சென்று பார்வையிட்டு சேதம் குறித்து ஆய்வு செய்தார். அவருடன் நெல்லியாளம் நகர்மன்ற கவுன்சிலர் சாந்தி புவனேஷ்வரன் உடனிருந்தார்.தொடர்மழை காரணமாக ஆறுகள் மற்றும் நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மண்சரிவு ஏற்படும் நிலை உள்ளது.

The post பந்தலூர் பகுதிகளில் கனமழைக்கு குடியிருப்பு பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டு பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: