பள்ளிபாளையத்தில் கையகப்படுத்தப்பட்ட கட்டிடங்களுக்கு இழப்பீடு வழங்கியும் அகற்றப்படாததால் விபத்து அபாயம்

*மறு அளவீடு செய்ய மனு

பள்ளிபாளையம் : பள்ளிபாளையத்தில் மேம்பாலம் கட்டுமான பணிக்காக கையகப்படுத்தப்பட்ட கட்டிடங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கியும், அளவீடு செய்த அளவுக்கு முழுமையாக அப்புறப்படுத்தாமல் முறைகேடு நடைபெற்றுள்ளது. இதை மறு அளவீடு செய்து முறைப்படி அப்புறப்படுத்த வேண்டுமென கலெக்டரிடம் முனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிபாளையம் நான்கு சாலை பகுதியில், சென்னை-கன்னியாகுமரி தொழில்வழித்தட திட்டத்தின் மூலம் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஆலாம்பாளையம் வரை கிராமப்புறங்களில் பணிகள் பெரும்பகுதி நிறைவடைந்த நிலையில், நகரின் நான்கு சாலை பகுதியில் தற்போது நடைபெற்று வருகிறது. பாலம் அமைப்பதற்காக சாலையின் ஒரு பகுதியில் உள்ள கட்டிடங்களை சர்வே செய்து குறியீடு செய்யப்பட்டு, அரசின் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்டது. இதற்கான தொகையினை பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்து பேசி நிர்ணயம் செய்த அதிகாரிகள், அதற்கான இழப்பீட்டு தொகையினை கட்டட உரிமையாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளனர்.

தொகையை பெற்றுக்கொண்டவர்கள் பலரும் குறியீடு செய்த பகுதியை தாங்களாகவே அப்புறப்படுத்திக்கொள்ள முன்வந்தனர். இதில் பல இடங்களில் அதிகாரிகள் சர்வே செய்த அளவுக்கு அப்புறப்படுத்தப்படாமல் அங்கொன்றும், இங்கொன்றுமாக இடித்து போக்கு காட்டி விட்டு, மீண்டும் பழைய அளவுக்கே புதிதாக கட்டியுள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தரைப்பகுதியில் குறியீடு செய்த அளவிற்கு அகற்றப்பட்ட பல கட்டிடங்கள், மேற்பகுதியில் அகற்றப்படாமல் சாலையில் நீட்டிக்கொண்டுள்ளதாகவும், இதனால் சாலையில் செல்லும் கனரக வாகனங்கள் கூரையில் இடித்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவித்து, கலெக்டருக்கு பாமக அமைப்பு செயலாளர் உமாசங்கர் மனு அனுப்பியுள்ளார்.

கட்டுமானங்களை அகற்றாமல், அகற்றியதாக போக்கு காட்டும் கட்டிட உரிமையாளர்களை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதனால், முறையாக அகற்றிய பலரும் தங்கள் கட்டிடங்களுக்கு முன் சுமார் 2 அடி வரை தற்காலிகமாக கூரைகள் அமைத்து வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார். பிளாட்பாரத்தின் நடுவே பிரமாண்டமான இரும்பு மின்கம்பங்கள், மழை காலங்களில் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துமெனவும் தெரிவித்துள்ளார். இதற்காக நெடுஞ்சாலைத்துறையின் உயர்அதிகாரிகள் முன்னிலையில் மறு அளவீடு செய்து சரிபார்க்க வேண்டுமென்றும் அவர் புகார் செய்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு உத்தரவிட்டால் ரீ சர்வே

இந்த விவகாரம் தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை கட்டுமான உதவி பொறியாளர் கபிலனை தொடர்பு கொண்டு கேட்டபோது, சர்வே செய்து குறியீடு செய்த அளவிற்கு கட்டுமானங்கள் அகற்றப்பட்டு, மேம்பாலம் மற்றும் சாலை அமைப்பு பணிகள் நடைபெறுகிறது. ரீ சர்வே செய்து சரிபார்ப்பது, அரசின் கொள்கை முடிவு. அதை பற்றி வெளியில் சொல்லக் கூடாது. இது குறித்து, மீண்டும் சரிபார்க்க வேண்டுமென அரசு உத்தரவிட்டால், ரீ சர்வே செய்ய முடியும். மற்றபடி திட்ட வரைபடத்தின் அளவுப்படிதான் பணிகள் நடைபெற்றுள்ளது,’ என்றார்.

The post பள்ளிபாளையத்தில் கையகப்படுத்தப்பட்ட கட்டிடங்களுக்கு இழப்பீடு வழங்கியும் அகற்றப்படாததால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Related Stories: