தாராபுரம் ராஜவாய்க்கால் கால்வாயில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ.24 கோடி நிதி ஒதுக்கீடு

*தமிழ் நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

தாராபுரம் : தாராபுரம் நகர்மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன் தலைமையில் துணைத்தலைவர் ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையாளர் திருமால் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் 56 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு 55 தீர்மானங்ககள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டன.

இதில், தாராபுரம் பகுதியில் செல்லும் ராஜவாய்க்கால் பாசன கால்வாயில் கலக்கும் கழிவு நீரை சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுத்தம் செய்து மீண்டும் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் பாசன கால்வாயில் செலுத்த ரூ.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து இதற்கு ஒப்புதல் வழங்கிய, நிதி ஒதுக்கீடு செய்த முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி செலுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தின் போது தாராபுரம் சந்தைப்பேட்டை வளாகத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் மீன் வளர்ச்சி துறையின் சார்பில் கட்டப்பட்ட மீன் விற்பனை நிலையம் மற்றும் பதப்படுத்தும் கிடங்கு தற்போது பாழடைந்து சமூகவிரோதிகளின் செயல்களுக்கு உறுதுணையாக கட்டிடம் இருந்து வருவதாகவும், அதனை மீன்வளத்துறை இடம் இருந்து பெற்று மாற்று உபயோகத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பதில் அளித்த நகர் மன்ற தலைவர் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்திற்கு இது குறித்த கடிதம் ஒன்றை அனுப்பி அவற்றை நகராட்சியின் மாற்று பயன்பாட்டிற்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கலாம் என பதில் அளித்துள்ளனர்.நகரில் சுற்றித் திரியும் தெரு நாய்களால் பொதுமக்களும், இருசக்கர வாகன ஓட்டிகளும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உயிரிழப்புகளை சந்திக்கும் சூழ்நிலை நீடித்து வருவதாகவும், இதற்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று நகர்மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பதில் அளித்த நகர்மன்ற, தெரு நாய்கள், வளர்ப்பு நாய்களை கட்டுப்படுத்த நாய் வளர்க்கும் உரிமையாளர்கள் அனைவரும் நகராட்சி நிர்வாகத்திடம் அடையாள வில்லை பெற்று வளர்ப்பு நாய்களை தங்களது வீடுகளிலேயே கட்டி வைத்து வளர்க்க வேண்டும். அதனை மீறி தெருவில் உலா வரும் வளர்ப்பு நாய்கள் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தொல்லை கொடுத்தால் அந்த நாயை வளர்க்கும் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கவும், கேட்பாரற்று சுத்தி கிடக்கும் தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளித்து இனப்பெருக்கத்தை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.

தொடர்ந்து நகரமன்ற கூட்டத்தின் நிறைவாக நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தாராபுரம் நகரின் வளர்ச்சிக்காக நகராட்சி மத்திய பேருந்து நிலையத்தின் வடபுறப் பகுதி 5 கோடி ரூபாயில் புனரமைப்புச் செய்யப்பட்டு புதிய கட்டிடங்களாக கட்டி முடித்து இப்பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு விழா பேருந்து நிலையம் என்ற பெயரையும், இதே போல் புதிதாக உடுமலை சாலையில் கட்டப்பட்டு வரும் நகராட்சி தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு அண்ணா தினசரி மார்க்கெட் என்ற பெயரையும் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இதே போல், விவசாயிகள் பொது மக்களின் 100 ஆண்டுகளைக் கடந்த கோரிக்கையை ஏற்று ராஜவாய்க்கால் பாசன கால்வாயில் கலந்து செல்லும் நகரின் கழிவு நீர் அனைத்தையும் சுத்திகரிப்பு செய்து அதற்கான சுத்திகரிப்பு நிலையம் தாராபுரம் குப்பிச்சிபாளையம் அருகே உள்ள உரக்கிடங்கு பகுதியில் அருகே அமைக்கப்பட உள்ளது.

இதற்காக நகர் முழுவதும் இருந்து வரும் 27 சாக்கடை கால்வாய்கள் கலக்கும் பகுதியில் இருந்து சாக்கடை நீரை இறைச்சி மஸ்தான் நகரின் எதிர்புறம் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பாதுகாப்பான ஆழமான தொட்டி அமைத்து அதில் சேகரித்து அங்கிருந்து குழாய் மூலம் நகராட்சி குப்பை உரக்கிடங்கிற்கு கொண்டு சென்று அங்கு கழிவுநீர் அனைத்தையும் சுத்தமான நீராக மாற்றி மீண்டும் பாசன கால்வாயில் குழாய்கள் மூலம் விட்டு விவசாயிகளின் துயரையும் பொதுமக்களின் துயரையும் துடைக்க நடவடிக்கை துவங்கப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கோரும் நிகழ்ச்சி நாளை (இன்று) 28ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுவதற்கான நிதியை ஒதுக்கித் தர முன்வந்த தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை வழங்கிய நகராட்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர், செய்தித் துறை அமைச்சர் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மற்றும் உறுதுணையாக இருந்த திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல குழு தலைவர் இல.பத்மநாபன் உள்ளிட்டோருக்கு நகர மக்களின் சார்பிலும் பாசன விவசாயிகளின் சார்பிலும் நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்றார்.

முன்னதாக, நகர் பகுதியில் கழிப்பிடங்கள் கட்டுவது பற்றியும் அவற்றை சுத்தம் செய்வது பற்றியும் சாக்கடை மற்றும் கழிவுநீர் செல்வதில் சில இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதை சரி செய்வது பற்றியும் புதிய மின்விளக்குகள் அமைத்து தருவது பற்றியும் அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்களிடையே காரசார விவாதம் எழுந்து பின் அவை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

The post தாராபுரம் ராஜவாய்க்கால் கால்வாயில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ.24 கோடி நிதி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Related Stories: