மக்கள்தொகையில் 73% பேராக இருந்தாலும் முதல் 200 நிறுவனங்களில் எதுவுமே ஓபிசி, தலித்துக்கோ சொந்தமில்லை: ராகுல் பேச்சு

பிரயாக்ராஜ்: ‘‘நாட்டின் மக்கள்தொகையில் 73 சதவீதம் பேர் ஓபிசி, தலித், பழங்குடியினராக இருந்தாலும், முதல் 200 நிறுவனங்களில் ஒன்று கூட அவர்களுக்கு சொந்தமானதாக இல்லை’ என உத்தரப்பிரதேசத்தில் ராகுல் காந்தி கூறி உள்ளார். உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை நேற்று மேற்கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் காந்தி பேசியதாவது:

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது நாட்டின் எக்ஸ்ரே. அதுதான் எல்லாவற்றையும் வெளிப்படுத்தும். சாதிவாரி கணக்கெடுப்பு இளைஞர்களின் ஆயுதம். அதன்மூலம் தான் உங்கள் மக்கள்தொகை என்ன என்பதை நீங்கள் கண்டுபிடிக்க முடியும். நாட்டின் செல்வத்தில் உங்கள் பங்கு னெ்ன என்பதை அறிய முடியும். தற்போது நாட்டில் ஓபிசி வகுப்பினர் 50 சதவீதம், தலித்கள் 15 சதவீதம், பழங்குடியினர் 8 சதவீதம் உள்ளனர். இவர்களின் மொத்த மக்கள் தொகை 73 சதவீதம். ஆனால் நாட்டில் உள்ள முதல் 200 நிறுவனங்களில் ஒன்று கூட ஓபிசி அல்லது தலித் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு சொந்தமானதாக இல்லை. நாட்டின் உயர்மட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் 90 பேரில் வெறும் 3 பேர் தான் உங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள். ஊடகத்துறையில் ஒருவர் கூட இல்லை. உங்களைப் போன்ற இளைஞர்களுக்கு இந்த நாட்டில் எதிர்காலம் இல்லை.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஓபிசி அல்லது பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த ஒருவர் கூட இல்லை. பெரிய தொழிலாளர்கள் பத்து, பதினைந்து பேரின் ரூ.14 லட்சம் கடனை தள்ளுபடி செய்யும் அரசு, விவசாயிகளின் கடனை ஒருபோதும் தள்ளுபடி செய்யவில்லை. தொழிலதிபர்கள் லட்சக்கணக்கான கோடி ரூபாயை ஒரு நிமிடத்தில் வங்கியில் கடன் பெறுகின்றனர். ஆனால், தலித், பிற்படுத்தப்பட்ட மக்கள் துரத்தி அடிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

* இன்று அமேதியில் யாத்திரை

அமேதி தொகுதியில் நீதி யாத்திரை இன்று நுழைகிறது. மாலை 3 மணி அளவில் காக்வா பகுதியில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. காந்திநகர் சுங்கச்சாவடி அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல் பேச உள்ளார். அமேதி யாத்திரையில் ராகுலுடன் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் இணைய உள்ளார். கடந்த மக்களவை தேர்தலில் அமேதியில் போட்டியிட்ட ராகுல், ஒன்றிய அமைச்சரான ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார். அமேதியை தொடர்ந்து ராகுலின் யாத்திரை ரேபரேலிக்கு செல்கிறது.

The post மக்கள்தொகையில் 73% பேராக இருந்தாலும் முதல் 200 நிறுவனங்களில் எதுவுமே ஓபிசி, தலித்துக்கோ சொந்தமில்லை: ராகுல் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: