ஜார்க்கண்ட் அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை: முதல்வர் சம்பாய் சோரன் பேட்டி காங்கிரசில் அதிருப்தி எதிரொலி

புதுடெல்லி: காங்கிரசில் அமைச்சர் பதவி கிடைக்காத எம்எல்ஏக்கள் அதிருப்தி அடைந்த நிலையில், ஜார்க்கண்ட்டில் கூட்டணி அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை என அம்மாநில முதல்வர் சம்பாய் சோரன் டெல்லியில் பேட்டி அளித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் நில மோசடி வழக்கில் ஹேமந்த் சோரன் கைதானதைத் தொடர்ந்து அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய முதல்வராக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் பதவியேற்றார். அவரது அமைச்சரவை கடந்த 16ம் தேதி விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில் ஹேமந்த் சோரன் தம்பி பசந்த் சோரன் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 3 பேர் அமைச்சராக பதவியேற்றனர்.

ஹேமந்த் அரசில் அமைச்சராக இருந்த அதே 4 காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது அக்கட்சியில் மோதலை ஏற்படுத்தி உள்ளது. புதிய முகங்களுக்கு அமைச்சர் பதவி தர வேண்டுமென காங்கிரசின் 8 அதிருப்தி எம்எல்ஏக்கள் டெல்லி விரைந்துள்ளனர். தங்கள் கோரிக்கை நிறைவேறாவிட்டால், சட்டப்பேரவை கூட்டத் தொடரை புறக்கணிக்கப் போவதாக மிரட்டி உள்ளனர். இந்நிலையில், ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் நேற்று டெல்லி சென்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கேவை சந்தித்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘‘முதல்வராக பொறுப்பேற்ற பிறகு மரியாதை நிமித்தமாக கார்கேவை சந்தித்தேன். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் விவகாரம் அக்கட்சியின் உள்விவகாரம். எங்கள் கூட்டணி உறுதியாக உள்ளது. அதனால் ஆட்சிக்கு எந்த சிக்கலும் இல்லை’’ என்றார். 81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் ஜேஎம்எம் கட்சிக்கு 29, காங்கிரசுக்கு 17, ஆர்ஜேடிக்கு 1 எம்எல்ஏக்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

* ஜேஎம்எம் எம்எல்ஏ அதிருப்தி

காங்கிரசில் அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில் ஜேஎம்எம் கட்சியின் லதேஹர் தொகுதி எம்எல்ஏ பைத்யநாத் ராம் அதிருப்தி அடைந்துள்ளார். அமைச்சர் பட்டியலில் தனது பெயர் இருந்ததாகவும் கடைசி நிமிடத்தில் நீக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார். இது தனது எஸ்சி சமூகத்தினரின் உணர்வை புண்படுத்தியிருப்பதாகவும் முதல்வர் சம்பாய் டெல்லியிருந்து திரும்பியதும் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வாய்மூடி இருக்க மாட்டேன் எனவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

The post ஜார்க்கண்ட் அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை: முதல்வர் சம்பாய் சோரன் பேட்டி காங்கிரசில் அதிருப்தி எதிரொலி appeared first on Dinakaran.

Related Stories: