கர்நாடகா அரசு நிதி ஒதுக்கீடு செய்தாலும் தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்ட முடியாது: அமைச்சர் துரைமுருகன் உறுதி

ராணிப்பேட்டை: கர்நாடகா அரசு நிதி ஒதுக்கினாலும், தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் எந்த காலத்திலும் அணை கட்ட முடியாது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார். ராணிப்பேட்டை மாவட்டம் குமணந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2 புதிய வகுப்பறை கட்டிடங்கள், கோடியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடங்கள், நெல்லிக்குப்பம் ஊராட்சியில் தொடக்கப்பள்ளி கட்டிடம், அக்ராவரம் பகுதியில் திருவிக அரசு நிதியுதவி பள்ளியில் 2 வகுப்பறை கட்டிடம் ஆகியவற்றை அமைச்சர் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று திறந்து வைத்தார். மேலும் அக்ராவரம் பகுதியில் 15 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2.88 கோடி மதிப்பில் கடனுதவியை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் பேட்டியில் கூறியதாவது: காவிரி ஆற்றில் மேகதாது அணை கட்டுவதற்காக கர்நாடக மாநில அரசு நிதியினை ஒதுக்கலாம், கமிட்டிகளை அமைக்கலாம், வேகமாக பேசி வரலாம். ஆனால் தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் எந்த காலத்திலும் அணை கட்ட முடியாது. அதுதான் சட்டம், அது தான் நியதி. அவர்கள் பேசிக்கொண்டு இருப்பதில் எங்களுக்கு கவலை இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post கர்நாடகா அரசு நிதி ஒதுக்கீடு செய்தாலும் தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்ட முடியாது: அமைச்சர் துரைமுருகன் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: