‘சர்வதேச அனுமதி கிடைக்கவில்லை’ நாகை- இலங்கை கப்பல் சேவை மீண்டும்…மீண்டும்… ஒத்திவைப்பு: நாளை மறுநாள் தொடங்கும் என நிர்வாகம் அறிவிப்பு

நாகப்பட்டினம்: இன்று தொடங்குவதாக இருந்த நாகை- இலங்கை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சர்வதேச அனுமதி கிடைக்காததே காரணம் என நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கடந்தாண்டு அக்டோபர் 14ம் தேதி பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டது. ‘செரியபாணி’ என்று பெயர் கொண்ட இந்த கப்பல் இலங்கைக்கு சென்று வந்த நிலையில், இயற்கை சீற்றம் காரணமாக அக்டோபர் 20ம்தேதி முதல் நிறுத்தப்பட்டது. இதன்பின்னர் மீண்டும் கப்பல் சேவையை தொடங்க வலியுறுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ‘சிவகங்கை’ என்ற பெயர் கொண்ட கப்பல் அந்தமானில் இருந்து வரவழைக்கப்பட்டு நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கடந்த 13ம் தேதி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த கப்பலில் பயணம் செய்ய விரும்புவோர் ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. இதனால் பயணிகள் ஆர்வமுடன் இலங்கை செல்ல முன்பதிவு செய்திருந்த நிலையில் திடீரென கப்பல் சேவை வரும் 17ம் தேதிக்கு (இன்று) மாற்றப்படுவதாக கடந்த 12ம் தேதி அறிவிக்கப்பட்டது. அப்போதும் இலங்கை செல்ல 150க்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்து காத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று திடீரென கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு, வரும் 19ம் தேதியில் இருந்து இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தமானில் இருந்து கொண்டுவரப்பட்ட ‘சிவகங்கை’ என்ற பெயர் கொண்ட கப்பல் சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சில சட்டரீதியான அனுமதி கிடைக்காத காரணத்தால் கப்பல் சேவை வரும் 19ம் தேதிக்கு மாற்றப்படுவதாக அந்த தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாகை- இலங்கை கப்பல் சேவை தேதி தொடர்ந்து தள்ளி போவதால் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளிடம் வருத்தம் தெரிவித்து அந்த தனியார் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்திய எல்லைக்குள் இயங்க அனுமதி மட்டுமே பெற்றிருந்த ‘சிவகங்கை’ என்ற பெயர் கொண்ட கப்பல் இலங்கை வரை இயக்கப்படவுள்ளதால், வணிக கடல் துறையின் சர்வதேச பதிவு எண் கிடைக்காத காரணத்தால் தொடர்ந்து கப்பல் சேவை அறிவிப்பு மாற்றப்படுவதாகவும், குறிப்பாக தமிழ்நாடு கடல்சார்வாரிய துணைத்தலைவர், தலைமை செயல் அலுவலர் ஆகியோர் கொண்ட குழுவினர் நாகப்பட்டினம் துறைமுகத்தில் ஆய்வு செய்த பின்னரே அங்கிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கப்பல் சேவை தொடங்கப்படும்’ என தெரிவித்துள்ளது. இந்த கப்பல் சேவையை ஒன்றிய அரசு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காலவரையின்றி தள்ளிவைப்பு: இலங்கை அமைச்சர்
நாகை-இலங்கை கப்பல் சேவை பல்வேறு காரணங்களுக்காக பலமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை அமைச்சர் நிமல் பாலா டி சில்வா கூறுகையில், ‘நாகை-காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து சில தொழில்நுட்ப காரணங்களுக்காக காலவரையின்றி தள்ளிவைக்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

The post ‘சர்வதேச அனுமதி கிடைக்கவில்லை’ நாகை- இலங்கை கப்பல் சேவை மீண்டும்…மீண்டும்… ஒத்திவைப்பு: நாளை மறுநாள் தொடங்கும் என நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: