சென்னை ஐஐடி சர்வதேச இசை மாநாட்டில் தமிழ் இசை புறக்கணிப்பு: தமிழ் ஆர்வலர்கள் கடும் அதிருப்தி

சென்னை: இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலாச்சாரத்தை இளைஞர்களிடையே பிரபலப்படுத்தும் அமைப்பான SPIC MACAY-வுடன் இணைந்து சென்னை ஐஐடி சார்பில் மே 20ம் தேதி முதல் 26 வரை சர்வதேச இசை, பண்பாட்டு மாநாடு சென்னையில் நடத்தப்படுகிறது. இதில் தமிழ்ப் பண்ணிசையை பாடுவதற்கு ஏற்பாடுகள் ெசய்யாததால் தமிழிசை பாடுவோர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் மாநாடு நடத்துவது குறித்து சென்னை ஐஐடியின் இயக்குநர் காமகோடி கூறியதாவது: சென்னை ஐஐடி மற்றும் இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலாச்சாரத்தை இளைஞர்களிடையே பிரபலப்படுத்தும் அமைப்பான SPIC MACAY ஆகியன இணைந்து 9வது ஆண்டு சர்வதேச இசை மற்றும் பண்பாட்டு மாநாட்டை சென்னையில் நடத்த ஏற்பாடு செய்துள்ளன. இந்த மாநாடு சென்னை ஐஐடி வளாகத்தில் மே 20ம் தேதி முதல் 26 வரை நடக்கிறது.

ஒரு வாரம் நடக்கும் இந்த மாநாட்டிற்கு இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள், தன்னார்வலர்கள் வர உள்ளனர். இந்திய கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றின் சிறப்புகளை பற்றி அறிந்து கொள்ளவும், கலைஞர்களுடன் கலந்துரையாடவும் இம் மாநாடு ஒரு வாய்ப்பாக அமைய உள்ளது.

மாநாட்டில் பாரம்பரிய இசை, நடன நிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், கைவினைப் பட்டறைகள், திரைப்படங்கள் ஆகியவை இடம் பெறுகின்றன. புதிய தலைமுறையினருக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஆசிரமம் போன்ற தனித்துவமான சூழலில் மாநாட்டை நடத்த வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய மற்றும் உலகப் பாரம்பரியத்தில் பொதிந்துள்ள உத்வேகத்தையும், ஆன்மிகத்தையும் ஒவ்வொரு குழந்தையும் அனுபவிக்க வேண்டும் என்ற `ஸ்பிக் மெக்கேவின்’ நோக்கத்தை இந்த மாநாடு பிரதிபலிக்க உள்ளது.

மேலும் இம் மாநாட்டில் புகழ்பெற்ற கலைஞர்களான பண்டிட் ஹரிபிரசாத் சவுராசியா (இந்துஸ்தானி புல்லாங்குழல்) உஸ்தாத் அம்ஜத் அலிகான் (சரோட்), பத்மா சுப்ரமணியம் (பரதநாட்டியம்), சுதா ரகுநாதன் (கர்நாடக இசை வாய்ப்பாட்டு) சேஷம்பட்டி சிவலிங்கம் (நாதஸ்வரம்) கன்னியாகுமாரி (வயலின்) உல்லாஸ் கஷல்கர் (இந்துஸ்தானி வாய்ப்பாட்டு), ஷாகித் பர்வேஸ்கான் (சித்தார்), சுனய்னா ஹசாரிலால் (கதக்), வாசிபுதீன் (த்ருபத்) ஜெயந்திகுமரேஷ் (சரஸ்வதி வீணை), அஸ்வினிபிடே தேஷ்பாண்டே (இந்துஸ்தானி வாய்ப்பாட்டு), மார்கி மது சாக்யார் (கூடியாட்டம்), லால்குடி கிருஷ்ணன் (கர்நாடக வயலின் இசை) உள்ளிட்ட பிரபலமான கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு ஐஐடி இயக்குநர் காமகோடி தெரிவித்தார். சென்னை ஐஐடியின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இசை மற்றும் பண்பாடு தொடர்பான மாநாடு நடத்தப்படுகிறது. இதுபோன்ற மாநாட்டில் பெரும்பாலும் கர்நாடக இசைக்கு முக்கியத்துவம் கொடுப்பது, மற்ற இசையை அடுத்த நிலையில் வைப்பது என்ற அளவில் நடத்தப்படுவதால் மற்ற இசைக் கலைஞர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

9வது ஆண்டாக நடத்தப்படும் இந்த இசை, பண்பாட்டு மாநாட்டில் இஸ்துஸ்தானி, கர்நாடக இசை வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும், தமிழ்நாட்டில் நடக்கும் சர்வதேச அளவிலான இந்த மாநாட்டில் தமிழ்ப் பண்ணிசைக்கு என எந்த முக்கியத்துவமும், வாய்ப்பும் வழங்கப்படவில்லை என்பது பெரும் குறைபாடாக உள்ளது எனவும், இதனால் பெரும்பாலான தமிழ் இசை ஆர்வலர்கள் அதிருப்திக்கு உள்ளாகி இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

மேலும் இதுகுறித்து ஐஐடி இயக்குநர் காமகோடியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, தமிழ் இசை விடுபட்டுவிட்டது. எப்படியாவது நாங்கள் அதைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கிறேன் என்று தெரிவித்தார். ஆனால் ஐஐடியின் பல்வேறு நிலையில் உள்ள அதிகாரிகள் கூறும்ேபாது, தமிழ்ப் பண்ணிசையும் முக்கியமானது, இது நமது பாரம்பரிய இசையாகும். அதுபற்றியும் இந்த மாநாட்டில் தெரிவிக்க வேண்டியதும் அவசியம். தமிழ்ப் பண்கள் குறித்து தொல்காப்பியம், சிலப்பதிகாரம் முதலிய நூல்களில் குறிப்புகள் காணப்படுகின்றன. இருப்பினும் ஒன்றிய அரசு தமிழ்ப் பண்ணிசைக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டது. நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று கைவிரிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் சர்வதேச அளவில் நடக்கும் இசை மாநாட்டில் தமிழ்ப் பண்ணிசை இடம் பெறாமைக்கு தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள், இசை வல்லுநர்கள் கண்டனம் தெரிவிப்பதுடன், ஒன்றிய அரசின் இந்த செயலால் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து ஒன்றிய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ்அவர்கள் ேகட்டுக் கொண்டனர்.

The post சென்னை ஐஐடி சர்வதேச இசை மாநாட்டில் தமிழ் இசை புறக்கணிப்பு: தமிழ் ஆர்வலர்கள் கடும் அதிருப்தி appeared first on Dinakaran.

Related Stories: