தொழிலாளர் ஆணையர் தலைமையில் தோட்ட தொழிலாளர் ஆலோசனை குழுவின் 52வது கூட்டம்: சென்னையில் நடந்தது

சென்னை: தொழிலாளர் ஆணையர் தலைமையில் தோட்டத் தொழிலாளர் ஆலோசனை குழுவின் 52வது கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.  தோட்டத் தொழிலாளர் ஆலோசனை குழுவின் 52வது கூட்டம் தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் தலைமையில் நேற்று சென்னை தமிழ்நாடு தொழிலாளர் நலவாரிய கருத்தரங்கு கூடத்தில் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில் கூடுதல் தொழிலாளர் ஆணையர் (நிர்வாகம்) சி.ஹேமலதா, அலுவலர் உறுப்பினர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரின் பிரதிநிதி, ஆலோசனை குழுவின் நிர்வாக தரப்பு பிரதிநிதிகள், தொழிற் சங்க தரப்பு பிரதிநிதிகள் மற்றும் மண்டல கூடுதல் தொழிலாளர் ஆணையர்கள், தொழிலாளர் இணை ஆணையர்கள், தொழிலாளர் உதவி ஆணையர்கள் (தோட்டங்கள்) மற்றும் தொழிலாளர் துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், 1951ம் வருட தோட்ட தொழிலாளர் சட்டத்தின்படி, தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ வசதிகள், தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் ஏடிஎம் அமைத்தல், குழந்தைகள் காப்பகம், கேண்டீன் வசதிகள், மனமகிழ் மன்றங்கள், பாதுகாப்பு உபகரணங்கள், கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான விவாதப் பொருட்கள் குழுவின் முன் விவாதிக்கப்பட்டு குழுத்தலைவர்-முதன்மைசெயலாளர், தொழிலாளர் ஆணையரால் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

தோட்ட தொழிலாளர்களுக்கு சட்டரீதியான சலுகைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தொழிலாளர் உதவி ஆணையர்கள் (தோட்டங்கள்) மற்றும் உதவி மருத்துவர் (தோட்டங்கள்) சிறப்பு கூட்டாய்வு நடத்தி, தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் உரிய காலத்திற்குள் தொழிலாளர்களுக்கு சென்றடைய வழிவகை செய்யவேண்டுமென்று குழுத் தலைவர் கேட்டுக்கொண்டார்.

The post தொழிலாளர் ஆணையர் தலைமையில் தோட்ட தொழிலாளர் ஆலோசனை குழுவின் 52வது கூட்டம்: சென்னையில் நடந்தது appeared first on Dinakaran.

Related Stories: