அதிபர் பதவிக்கான வேட்பாளர் தேர்தல் தெற்கு கரோலினாவில் பைடன் வெற்றி: டிரம்பை மீண்டும் வீழ்த்துவேன் என உறுதி

வாஷிங்டன்: தெற்கு கரோலினா ஜனநாயகக் கட்சியின் பிரைமரி தேர்தலில் ஜனாதிபதி ஜோ பைடன் வெற்றி பெற்றார். அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி என இரண்டு கட்சிகளில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க மாகாணங்களில் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. குடியரசுக் கட்சியில் முன்னாள் அதிபர் டொனல்ட் டிரம்ப் முன்னிலையில் இருக்கிறார். , ஜனநாயக கட்சியின் முதல் வாக்கெடுப்பு தெற்கு கரோலினாவில் நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் அதிபர் பைடனை எதிர்த்து மரியேன் வில்லியம்சன் உள்ளிட்ட பல பிரதிநிதிகள் போட்டியிட்டனர். வாக்கெடுப்பில், பைடன் 96.2 சதவீதம் பெற்று வெற்றிபெற்றார். மரியேன் வில்லியம்சனுக்கு 2.1 சதவீதம் மட்டுமே கிடைத்தது.

இதைத்தொடர்ந்து அதிபர் பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2020 ம் ஆண்டில், தெற்கு கரோலினாவின் வாக்காளர்கள் தான் தேர்தல் நிபுணர்கள் கூறியது தவறு என நிரூபித்து, எங்கள் பிரசாரத்தை உயிர்ப்பித்து,அதிபர் பதவியை வெல்வதற்கான பாதையை அமைத்தனர். இப்போது 2024 தேர்தலிலும், தெற்கு கரோலினா மக்கள் மீண்டும் அதே போன்று முடிவை எடுத்துள்ளனர். டிரம்ப் நாட்டை பிளவுபடுத்தி, பின்னோக்கி எடுத்து செல்வார். அதை நாம் அனுமதிக்க முடியாது. உலகின் மிகவும் வலுவான பொருளாதாரமாக அமெரிக்கா உள்ளது. அதை நாம் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். தெற்கு கரோலினா பிரசாரத்துக்கு புத்துணர்வு ஊட்டியுள்ள நிலையில், 2020ம் ஆண்டை போல் 2024 ம் ஆண்டிலும் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக நிற்க உள்ள டிரம்பை மீண்டும் தோற்கடிப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.

 

The post அதிபர் பதவிக்கான வேட்பாளர் தேர்தல் தெற்கு கரோலினாவில் பைடன் வெற்றி: டிரம்பை மீண்டும் வீழ்த்துவேன் என உறுதி appeared first on Dinakaran.

Related Stories: