ஜார்கண்டில் 24 மணி நேரம் நீடித்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது: சம்பய் சோரன் இன்று முதல்வர் பதவியேற்க ஆளுநர் அழைப்பு

ராஞ்சி: ஜார்கண்டில் 24 மணி நேரம் நீடித்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது. ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்), காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணி ஆட்சி நடைபெற்றது. ஜேஎம்எம் கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக இருந்து வந்தார். இவர் மீதான நில மோசடி , சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பான புகாரில் ஹேமந்த் சோரன் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்திய அமலாக்க அதிகாரிகள் அவரை கைது செய்வதாக அறிவித்தனர். இதையடுத்து அவர் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஹேமந்த் சோரனை கைது செய்தனர். இந்த பரபரப்புக்கு இடையே, மாநில போக்குவரத்துறை அமைச்சரும் கட்சியின் மூத்த தலைவருமான சம்பாய் சோரனை புதிய முதல்வராக எம்எம்ஏக்கள் தேர்வு செய்தனர். ஜார்க்கண்டில் புதிய அரசு அமைப்பதற்காக நேற்று முன்தினம் ஆளுநரை சந்தித்து கட்சிக்கு ஆதரவளிக்கும் 43 எம்எல்ஏக்களின் கையெழுத்து இடப்பட்ட கடிதத்தை அளித்தார். அப்போதும் ஆளுநர் அமைதி காத்ததால் குதிரை பேரத்தை தவிர்க்க ஜேஎம்எம் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்களை ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால் பனிமூட்டம் காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டதால் எம்எல்ஏக்கள் மீண்டும் ராஞ்சி சென்றனர். பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு ராஜினாமா செய்த 5 மணி நேரத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைந்தது. ஆனால் ஜார்க்கண்டில் 22 மணி நேரம் ஆகியும் ஆளுநர் அழைப்பு விடுக்காதது ஏன் என்று ஜேஎம்எம் கட்சியினர் கேள்வி எழுப்பினர். சுமார் 24 மணி நேரம் ஜார்கண்ட் அரசியலில் குழப்பம் நிலவி வந்த நிலையில் இன்று முதலமைச்சராக பதவியேற்க வருமாறு சம்பாய் சோரனுக்கு அம்மாநில ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். பதவியேற்ற 10 நாட்களுக்குள் சட்டப்பேரவையில் பதவி வாக்கெடுப்பு நடத்தி சம்பாய் சோரன் பெரும்பான்மை நிரூபிக்கவும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட ஹேமந்த் சோரன் ஒரு நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று அவர் மீண்டும் ஆஜர்படுத்தப்பட உள்ளார். மேலும் தம்மை கைது செய்ததை எதிர்த்து ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த வழக்கும் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

The post ஜார்கண்டில் 24 மணி நேரம் நீடித்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது: சம்பய் சோரன் இன்று முதல்வர் பதவியேற்க ஆளுநர் அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: