இந்தியாவில் 718 பனிச்சிறுத்தைகள் உள்ளன: ஒன்றிய வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தகவல்


டெல்லி: இந்தியாவில் 718 பனிச்சிறுத்தைகள் உள்ளன என்று ஒன்றிய வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஒன்றிய வனத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்தியாவில் இமயமலைப் பகுதியில் பனிச்சிறுத்தைகள் வாழ்கின்றன. லடாக், ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரா கண்ட், சிக்கிம், அருணாச்சல பிரதேசம் மாநிலங்கள், யூனியன்பிரதேசங்களில் கடந்த 2019முதல் 2023-ம் ஆண்டு வரை பனிச்சிறுத்தைகள் தொடர்பாக அறிவியல்பூர்வமாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில்இந்தியாவில் 718 பனிச்சிறுத்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக லடாக் இமயமலைப் பகுதிகளில் 477, உத்தராகண்டில் 124, இமாச்சல பிரதேசத்தில் 51, அருணாச்சல பிரதேசத்தில் 36, சிக்கிமில் 21, ஜம்மு-காஷ்மீரில் 9 பனிச் சிறுத்தைகள் உள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

`மலைகளின் அரசன் பனிச்சிறுத்தை’
காடுகளுக்குச் சிங்கம், கடல்களுக்குச் சுறா, வானத்துக்குக் கழுகு என்பது போல மலைகளுக்கு ஒரு ராஜா எதுவென்று தேர்வு செய்ய வேண்டுமென்றால் அதற்கு பனிச்சிறுத்தையைவிட கம்பீரமான விலங்கு எதுவுமில்லை. மனிதர்களால் எளிதாகச் செல்ல முடியாத கரடுமுரடான மலைப்பகுதிகளில் வாழும் என்பதால் இவற்றின் குணநலன்கள் பல வருடங்களாகப் புரியாத புதிராகவே இருந்தன. கடந்த பத்து ஆண்டுகளில் நடந்திருக்கும் ரிமோட் கேமரா மற்றும் பிற தொழில்நுட்ப வளர்ச்சிகள்தான் இவற்றின் வாழ்க்கை எப்படியானது என நமக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய வைத்திருக்கிறது

நீளம் தாண்டும் போட்டியெல்லாம் வைத்தால் அவ்வளவுதான். தனது உடலைவிட 7 மடங்கு நீளம்வரை தாவும் இந்தச் சிறுத்தைகள். முன்னங்கால்கள், பின்னங்கால்களைவிடச் சற்றே சிறியதாக இருப்பதால் இவற்றால் இப்படித் தாவமுடிகிறது. இந்தப் பனிச்சிறுத்தைகளை நேரில் பார்ப்பதே அவ்வளவு அரிதான விஷயம்தான். அமானுஷய பேய்கள்கூட கண்ணில் தென்பட்டுவிடும். ஆனால், இவை தென்படாது என்பதாலேயே இதை “மலைகளின் பேய்” என்று சொல்வார்கள். இவற்றின் முக்கிய தனித்துவமே இவற்றின் வால்தான் உடலின் 90% நீளம்வரை இவை வளரும். இந்த நீளம் இவற்றின் அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று.

குளிருக்கு இதமாக இருக்க அவ்வப்போது வாலைப் போர்வைபோலப் போர்த்திக்கொள்ளும். பனிச் சிறுத்தைகளின் தோல் பனிப் பாறைகளின் நிறத்திலேயே இருப்பதால், எளிதில் கண்டுபிடிக்க முடியாது. பனிச்சிறுத்தைகள் மத்திய மற்றும் தென் ஆசிய மலைகளில்தான் அதிகமாகக் காணப்படுக்கின்றன. பொதுவாகப் பனிச்சிறுத்தை கூச்ச சுபாவம் கொண்டது. மனிதர்களின் செயல்பாடுகளால் பனிச்சிறுத்தைகள் எண்ணிக்கையில் குறைந்துகொண்டே வருகின்றன. இதை பாதுகாக்கும் முயற்சிகள் தொடங்கியுள்ளன.

The post இந்தியாவில் 718 பனிச்சிறுத்தைகள் உள்ளன: ஒன்றிய வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: