சர்வதேச சுங்க நாள் விழா ரூ.1.05 லட்சம் கோடி வருவாய் ஈட்டி சுங்கத்துறை சாதனை: தலைமை ஆணையர் தகவல்

சென்னை: கடந்த ஓராண்டில் ரூ.1.05 லட்சம் கோடி வருவாய் ஈட்டி சுங்கத்துறை சாதனை படைத்துள்ளது என சுங்கத்துறை தலைமை ஆணையர் கூறினார். சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் சர்வதேச சுங்க நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தேவராஜூ நாகார்ஜூன், மத்திய சரக்கு மற்றும் சேவை வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் ஆசிஸ் வர்மா ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில், சென்னை மண்டல சுங்கத்துறை தலைமை ஆணையர் ராம் நிவாஸ் பேசியதாவது: நாட்டின் எல்லையோர பகுதியில் சுங்கத்துறையின் பணி முக்கியமானது. சட்ட விரோதமாக பொருட்களை கடத்துதல், அபாயகரமான பொருட்களை கொண்டு வருதல் ஆகியவற்றை கண்காணித்து தடுத்து நடவடிக்கை எடுத்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக கொண்டு வரும் தங்கம், வெளிநாட்டு கரன்சிகள், அரியவகை விலங்குகளை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட கடத்தல் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஓராண்டில் மட்டும் சென்னை மண்டலத்தில் 235 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் ரூ.1.05 லட்சம் கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இது கடந்த 2022-23ம் நிதியாண்டை காட்டிலும் 13.29 சதவீதம் அதிகம். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, கடத்தலில் ஈடுபடும் நபர்களை பிடிக்க சுங்கத்துறைக்கு உதவியாக இருக்கும் சென்னை விமான நிலையத்தில் பணியாற்றும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் சிறப்பான பணியை பாராட்டி விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுங்கத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post சர்வதேச சுங்க நாள் விழா ரூ.1.05 லட்சம் கோடி வருவாய் ஈட்டி சுங்கத்துறை சாதனை: தலைமை ஆணையர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: