கரூர்-சேலம் வழித்தடத்தில் உள்ள வாங்கல் ரயில் நிலையம் நாளை முதல் மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு


சேலம்: கரூர்-சேலம் வழித்தடத்தில் உள்ள வாங்கல் ரயில் நிலையம் நாளை முதல் மூடப்படுவதாக அறிவித்துள்ளனர். பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் வாங்கல் ரயில் நிலையம் மூடப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. வாங்கல் ரயில் நிலையத்தில் இனி எந்த ரயில்களும் நிற்காது என்றும் இன்று வரை மட்டுமே இங்கு ரயில்கள் நிற்கும் ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. மேலும், பயணிகளுக்கு அந்த ரயில் நிலையத்துக்கான பயணச்சீட்டும் வழங்கப்படாது என சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோகனூர்-கரூர் இடையே 2013ம் ஆண்டு வாங்கல் ரயில் நிலையம் அமைக்கப்பட்டது. கரூர்-சேலம் அகல ரயில் பாதை திட்டம் ரூ.630 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 85 கிமீ தூரம் உள்ள புதிய பாதையில் கரூரை அடுத்து வாங்கல் ரயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்பிறகு காவிரியாற்று பாலத்தை தாண்டியதும் நாமக்கல் மாவட்டம் மோகனூர் ரயில் நிலையம் வருகிறது. இந்த புதிய பாதையில் கடந்த 2013ம் ஆண்டு மே மாதம் முதல் ஒரு பாசஞ்சர் ரயில் மட்டுமே தற்போது இயக்கப்படுகிறது.

சிங்கிள் லைன் என்பதால் ஸ்டேஷன் மாஸ்டர் இல்லை. காவிரிபாலம் அருகில் இருப்பதால் நிலையம் மிக உயரத்தில் அமைந்திருக்கிறது. நீண்ட படிக்கட்டுகளில் ஏறி நிலையத்திற்கு செல்ல வேண்டியதிருக்கிறது. இதனால் வயதானவர்கள், குழந்தைகள் சிரமப்படுகின்றனர். மேலும் அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தி பயணிகள் அதிகஅளவில் வந்து செல்ல வசதி செய்ய வேண்டும். கரூர் மாவட்டத்தில் ஜங்ஷனை தொடர்ந்து பாசஞ்சர் ரயில் நிற்கும் ஒரே நிலையம் இதுதான்.

 

 

The post கரூர்-சேலம் வழித்தடத்தில் உள்ள வாங்கல் ரயில் நிலையம் நாளை முதல் மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: