நேதாஜி பிறந்த நாளில் அவர்தம் புகழைப் போற்றுவோம்.. பிரதமர் மோடி, ஆளுநர் ரவி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!!

சென்னை : பராக்கிரம தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான இன்று, நேதாஜியின் வாழ்க்கை மற்றும் தீரத்துக்குப் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்.சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது; “பராக்கிரம தினத்தை முன்னிட்டு இந்திய மக்களுக்கு எனது வாழ்த்துகள். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான இன்று, அவரது வாழ்க்கை மற்றும் தீரத்திற்கு மரியாதை செலுத்துவோம். நமது தேசத்தின் சுதந்திரத்திற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.”

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள பதிவில், “பராக்கிரம தினத்தில், இந்திய தேசிய ராணுவத்திற்கு தலைசிறந்த தலைமையை வழங்கி, ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு, அவர்களின் வலிமைக்கு சவால் விடுத்த மாபெரும் தொலைநோக்கு புரட்சியாளர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு நன்றியுள்ள தேசம் மரியாதை செலுத்துகிறது. 1946-ம் ஆண்டு பிப்ரவரியில் கடற்படைக் கிளர்ச்சிக்கு வழிவகுத்த சுதந்திரத்துக்கான சீருடை அணிந்த ஆயிரக்கணக்கான இந்திய ஆண்களையும் பெண்களையும் நேதாஜி ஊக்குவித்தார்.விமானப்படையில் கிளர்ச்சிகள் மற்றும் ஆங்கிலேயரின் ஆயுதப் படைகளில் உள்ள மற்ற இந்தியர்கள், நாட்டை விட்டு வெளியேறும் கட்டாயத்தை ஆங்கிலேயருக்கு ஏற்படுத்தினர். சுயசார்பு பாரதத்தை உருவாக்குவதில் நமது நாட்டின் இளைஞர்களுக்கு அவர் என்றும் ஊக்க சக்தியாக இருப்பார் என ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டுள்ளார்.

டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய தேசிய விடுதலையை தன் உயிர் மூச்சாகக் கொண்டு ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை துணிச்சலுடன் எதிர்கொண்ட வீரத் திருமகன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த தினம் இன்று. உயர்ந்த லட்சியத்தோடும், கொள்கை உறுதியோடும் இறுதிவரை பயணித்து சுதந்திர போராட்டத்தை வலுப்படுத்திய புரட்சி நாயகர் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன், “இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தனித்துத் துலங்கிய தீரமிகு போராட்டத் தளகர்த்தரும், பூமியில் எவர்க்குமினி அடிமை செய்யோம்’ என்ற பாரதியின் சொற்களுக்கு வடிவமாக வாழ்ந்தவருமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த நாளில் அவர்தம் புகழைப் போற்றி மகிழ்கிறேன்,”என்று கூறியுள்ளார்.

The post நேதாஜி பிறந்த நாளில் அவர்தம் புகழைப் போற்றுவோம்.. பிரதமர் மோடி, ஆளுநர் ரவி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!! appeared first on Dinakaran.

Related Stories: