அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓ.பன்னீர் செல்வத்தின் மனு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட் தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த மனுவில் முகாந்திரம் இல்லை என கூறி வழக்கை முடித்து வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம், அவருடைய ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம்,‘‘இந்த விவகாரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளதால், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும். அதற்கு தடை விதிக்க முடியாது.

அதேபோன்று ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கிய சிறப்பு தீர்மானத்துக்கும் தடை விதிக்க முடியாது என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதிமுக பொதுக்குழு மற்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆகிய விவகாரத்தில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட மேற்கண்ட நான்கு பேரும் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள்,சஞ்சீவ் குமார் மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வேணுகோபால், ‘‘விதிகளுக்கு முரணாக கடந்த 2022 ஜூலை 11ல் எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவை தன்னிச்சையாக கூட்டி, தன்னை அதிமுகவின் பொதுச்செயலாளர் என அறிவித்துக் கொண்டார். ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி கட்சியில் இருந்து நீக்கி விட்டனர். இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன்,‘‘கடந்த 2022ம் ஆண்டு நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது என தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘ஒரு கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அனைவரும் ஒன்றிணைந்து ஒருமித்த கருத்தோடு பொதுச்செயலாளரை சிறப்பு தீர்மானம் மூலம் தேர்வு செய்திருக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது.

மேலும் நடத்தப்பட்ட பொதுக்குழு, பொதுச்செயலாளர் தேர்வு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை. குறிப்பாக கட்சியின் பொதுக்குழுவுக்கு உச்சபட்ச அதிகாரம் உள்ள நிலையில், பொதுச்செயலாளரை பொதுக்குழு ஏற்றுக்கொண்டு விட்டதால், அந்த தீர்மானத்திற்கு எவ்வாறு தடை விதிக்க முடியும். குறிப்பாக இதுதொடர்பான விவகாரத்தில் சிவில் சூட் வழக்கு கீழமை நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்பதால் இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட்டு எந்தவித உத்தரவுகளையும் பிறப்பிக்க விரும்பவில்லை.

எனவே அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் உட்பட நான்கு பேர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்கிறோம். இருப்பினும் இதுதொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் இருக்கும் சிவில் சூட் பிரதான வழக்கை தகுதியின் அடிப்படையில் விரைந்து விசாரிக்க வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

The post அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓ.பன்னீர் செல்வத்தின் மனு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட் தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: