புதுகை வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு: 800 காளைகள் ஆக்ரோஷ பாய்ச்சல்; 250 வீரர்கள் மல்லுக்கட்டு


புதுகை: புதுகை அருகே வடமலாப்பூரில் இன்று நடந்த ஜல்லிக்கட்டில் 800 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 250 வீரர்கள் காளைகளுடன் மல்லுக்கட்டினர். புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசல் அருகே உள்ள வடமலாப்பூரில் பிடாரி அம்மன் கோயில் பொங்கல் திருவிழாவையொட்டி இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் பங்கேற்க திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், விராலிமலை, கீரனூர், இலுப்பூர், அன்னவாசல் உள்ளிட்ட இடங்களில் இருந்து 800 காளைகள் அழைத்து வரப்பட்டன. 250 வீரர்கள் வந்திருந்தனர். காளைகளுக்கும், வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். காலை 8.30 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்.

வாடிவாசலில் இருந்து முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதையடுத்து மற்ற ஊர் காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசல் வழியே சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் களத்தில் நின்று ஆட்டம் காட்டியதுடன், வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. காளைகள் முட்டியதில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ குழுவினர் அங்கேயே சிகிச்சை அளித்தனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் குத்துவிளக்கு, சில்வர் பாத்திரங்கள், பீரோ, கட்டில், சேர், ரொக்கம் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. போட்டியையொட்டி 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post புதுகை வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு: 800 காளைகள் ஆக்ரோஷ பாய்ச்சல்; 250 வீரர்கள் மல்லுக்கட்டு appeared first on Dinakaran.

Related Stories: