ஆஸி. ஓபன் டென்னிஸ் 2வது சுற்றில் ரைபாகினா: சுமித் நாகல் முன்னேற்றம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, கஜகஸ்தான் வீராங்கனை எலனா ரைபாகினா தகுதி பெற்றார். முதல் சுற்றில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவுடன் (31 வயது, 37வது ரேங்க்) நேற்று மோதிய ரைபாகினா (24 வயது, 3வது ரேங்க்), டை பிரேக்கர் வரை கடும் போராட்டமாக அமைந்த முதல் செட்டை 7-6 (8-6) என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை பெற்றார். அதே வேகத்துடன் 2வது செட்டிலும் துடிப்புடன் விளையாடிய அவர் பிளிஸ்கோவாவின் சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்து 7-6 (8-6), 6-4 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார்.

விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 33 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு முதல் சுற்றில் நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) 7-6 (7-2), 6-2 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் சோபியா கெனினை வீழ்த்தினார். முன்னணி வீராங்கனைகள் யெலனா ஆஸ்டபென்கோ (லாத்வியா), ஸ்லோன் ஸ்டீபன்ஸ், டேனியலி கோலின்ஸ் (அமெரிக்கா), விக்ரோரியா அசரெங்கா (பெலாரஸ்), டாரியா கசட்கினா (ரஷ்யா), எம்மா ரடுகானு (இங்கிலாந்து) ஆகியோரும் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் களமிறங்கிய இந்திய வீரர் சுமித் நாகல் (26 வயது, 139வது ரேங்க்) 6-4, 6-2, 7-6 (7-5) என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் அலெக்சாண்டர் புப்லிக்கை (26 வயது, 31வது ரேங்க்) வீழ்த்தி அதிர்ச்சியளித்தார். இப்போட்டி 2 மணி, 37 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலிய வீரர் தனாசி கோக்கினாகிஸ் தனது முதல் சுற்றில் 7-6 (7-1), 2-6, 6-7 (4-7), 6-1, 7-6 (10-8) என 5 செட்கள் கடுமையாகப் போராடி ஆஸ்த்ரியாவின் செபாஸ்டியன் ஆஃப்னரை வென்றார். இப்போட்டி 4 மணி, 18 நிமிடத்துக்கு நீடித்தது குறிப்பிடத்தக்கது. முன்னணி வீரர்கள் கேஸ்பர் ரூட் (நார்வே), கிரிகோர் திமித்ரோவ் (பல்கேரியா), அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி) ஆகியோரும் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

The post ஆஸி. ஓபன் டென்னிஸ் 2வது சுற்றில் ரைபாகினா: சுமித் நாகல் முன்னேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: