மகாராஷ்டிரா சட்டப்பேரவை சபாநாயகர் தீர்ப்பு ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா

மும்பை: மகாராஷ்டிராவில் அப்போதைய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, உத்தவ் அரசில் அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே 2022ம் ஆண்டு ஜூன் மாதம் அதிருப்தி எம்எல்ஏக்களுடன் வெளியேறினார். இதனால் பெரும்பான்மை இழந்து உத்தவ் ஆட்சி கவிழ்ந்தது. பின்னர் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜவுடன் கூட்டணி அமைத்து முதல்வராகியுள்ளார். இரு தரப்பிலும் கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இதனை மகாராஷ்டிரா சட்டப்பேரவை சபாநாயகர் ராகுல் நர்வேகர் விசாரணை நடத்தி நேற்று பிறப்பித்த உத்தரவு: முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிதான் உண்மையான சிவசேனாவாகும். ஷிண்டே அணி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. கொறடா உத்தரவை மீறியதற்காகவும், கட்சி விரோத நடவடிக்கைகளுக்காகவும், கட்சிக் கட்டுப்பாட்டை பின்பற்றாததற்காகவும், அதிருப்தியை வெளிப்படுத்தியதற்காகவும் ஷிண்டே அணி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது. உத்தவ் அணி எம்.எல்.ஏ.க்கள் 14 பேரையும் தகுதி நீக்கம் செய்யவில்லை.இவ்வாறு சபாநாயகர் கூறியுள்ளார். இந்த உத்தரவு ஜனநாயகப் படுகொலை என உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார். தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய உத்தவ் தரப்பு தீர்மானித்துள்ளது.

The post மகாராஷ்டிரா சட்டப்பேரவை சபாநாயகர் தீர்ப்பு ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா appeared first on Dinakaran.

Related Stories: