மோடி பற்றி சர்ச்சை கருத்து வெளியுறவு அமைச்சகத்தில் ஆஜராகி மாலத்தீவு தூதர் விளக்கம்

புதுடெல்லி: பிரதமர் மோடி பற்றி இழிவான கருத்துகளை மாலத்தீவு அமைச்சர்கள் தெரிவித்த விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கான அந்த நாட்டின் தூதர் நேற்று டெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சக அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். பிரதமர் மோடி கடந்த 2ம் தேதி லட்சத்தீவு சென்றிருந்தார். அப்போது, ஆழ்கடலில் நீச்சல் அடித்தும், கடற்கரையில் வாக்கிங் சென்றும் லட்சத்தீவின் அழகை ரசித்தார் மோடி. அந்த படங்களை அவர் டிவிட்டரில் பகிர்ந்தார். லட்சத்தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும், அங்கு வாழும் மக்களின் நம்ப முடியாத அரவணைப்பையும் கண்டு நான் பிரமிக்கிறேன்’ என பதிவிட்டிருந்தார்.

மோடியின் லட்சத்தீவு பயணத்தை இழிவுபடுத்தி மாலத்தீவு நாட்டின் அமைச்சர்கள் மரியம் ஷியூனா, மல்ஷா ஷரீப் மற்றும் அப்துல்லா மஹ்சூம் மஜித் ஆகியோர் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இதற்கு சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழத் தொடங்கியது. இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்து எதிர்ப்புகள் அதிகரித்த நிலையில், சர்ச்சை கருத்துகளைக் கூறிய அமைச்சர்கள் மரியம் ஷியூனா, மல்ஷா ஷரீப், மஹ்சூம் மஜித் ஆகியோரை தற்காலிக பதவி நீக்கம் செய்து அதிபர் முகமது முய்சு உத்தரவிட்டார்.

இது சர்ச்சையான நிலையில், இந்தியர்கள் பலரும் தங்கள் மாலத்தீவு பயணத்தை ரத்து செய்து வருகின்றனர். மாலத்தீவு சுற்றுப்பயணத்துக்காக செல்ல திட்டமிட்டிருந்த 10,500 க்கும் மேற்பட்ட ஓட்டல் முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாலத்தீவுக்கு முன்பதிவு செய்யப்பட்ட 5,200 விமான டிக்கெட்களும் ரத்து ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்தியாவுக்கான மாலத்தீவு தூதர் இப்ராஹிம் ஷஹீப்புக்கு ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியது.

இதையொட்டி, இப்ராஹிம் ஷஹீப் நேற்று டெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சக அலுவலகத்துக்கு நேற்று வந்து வெளியுறவு அமைச்சக அதிகாரிகளை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது சர்ச்சைக்குரிய கருத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் அதற்கு மாலத்தீவின் அரசின் சார்பில் வருத்தம் தெரிவித்ததாக வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

* சீனாவில் முய்சு
மாலத்தீவு அதிபர் முய்சு நேற்று சீனாவுக்கு சென்றார். 5 நாள் பயணமாக அங்கு சென்றுள்ள அவர் சீனாவின் அதிபர் ஜின்பிங் மற்றும் தலைவர்களை சந்தித்து பேசுகிறார். அப்போது இருதரப்புக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.

The post மோடி பற்றி சர்ச்சை கருத்து வெளியுறவு அமைச்சகத்தில் ஆஜராகி மாலத்தீவு தூதர் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: