அரியானா மாநில பல்கலைக்கழக பேராசிரியர் மீது 500 மாணவியர் பாலியல் புகார்: அறைக்கு அழைத்து துன்புறுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டு

சிர்சா: அரியானா மாநில பல்கலைக்கழக பேராசிரியர் மீது 500 மாணவியர் பாலியல் புகார் கொடுத்துள்ள நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியானா மாநிலம் சிர்சாவில் உள்ள சவுத்ரி தேவி லால் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவியரில் சுமார் 500 மாணவியர், பேராசிரியர் ஒருவர் மீது பாலியல் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார், கவர்னர் மற்றும் மாநில மகளிர் கமிஷனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ‘பேராசிரியர் ஒருவர், தனது அறைக்கு மாணவியரை அழைத்து பேசும் போது, அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியும், சீண்டல்களையும் செய்து வந்தார். பல நாட்களாக இதுபோன்ற செயல்களை செய்து வரும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவிகளின் கடிதம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் படித்த மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி வருகிறார்கள்.

இதுகுறித்து ேபாலீஸ் ஏஎஸ்பி தீப்தி கார்க் கூறுகையில்,
‘பேராசிரியருக்கு எதிராக தற்போது மாணவிகள் நான்காவது முறையாக கடிதம் எழுதியுள்ளனர். இதற்கு முன் எழுதப்பட்ட கடிதம் குறித்து பல்கலைக்கழக உள்விவகார குழு விசாரணை நடத்தியது. ஆனால் பேராசிரியர் மீதான குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். இதுகுறித்து குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் அளித்த பேட்டியில், ‘அரசியல் அழுத்தத்தால் என் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. பல்கலைக்கழகம் தொடர்பான சில பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறேன்.

அதனால் நான் சிலரால் குறிவைக்கப்படுகிறேன். எனக்கு எதிரான எந்த விசாரணைகளையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். இந்த விவகாரத்தில் முதல் புகார் கடிதம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மாணவிகளால் எழுதப்பட்டது. அந்தக் கடிதம் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு அனுப்பப்பட்டது. இது தொடர்பாக பல்கலைக்கழகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் என் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை’ என்றார்.

The post அரியானா மாநில பல்கலைக்கழக பேராசிரியர் மீது 500 மாணவியர் பாலியல் புகார்: அறைக்கு அழைத்து துன்புறுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: