இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களில் 43% பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்

சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று தொடங்கியது. மாநாட்டிற்கு வந்த வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களை வரவேற்று தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசியதாவது: இந்தியாவில் அதிக பொருளாதாரம் கொண்ட 2வது மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. 45,000 தொழிற்சாலைகள் இங்கு உள்ளன.ஆட்டோமொபைல், உதிரி பாகங்கள், டயர் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு 5.37 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு நடந்த ஏற்றுமதியில், இந்த ஆண்டு 5.6 பில்லியன் அமெரிக்க டாலர் அளவை ஏற்கனவே கடந்துவிட்டோம். எலக்ட்ரானிக் பொருள் உற்பத்தியில் முன்னணியில் உள்ள தமிழ்நாடு, இந்திய ஏற்றுமதியில் 30% பங்களிப்பை அளிக்கிறது. இந்தியாவில் விற்பனையாகும் 70% எலக்ட்ரிக் 2 சக்கர வாகனங்கள் மற்றும் 40% எலக்ட்ரிக் 4 சக்கர வாகனங்கள், தமிழ்நாட்டில் தயாரானவையாகும். தோல் இல்லாத காலணி உற்பத்தி பிரிவிலும் உலக அளவில் முன்னேற்றம் கண்டு வருகிறது.

இந்தியாவிலேயே அதிக நகரமயமாதல் நடைபெறும் தமிழ்நாடு, பெண்களுக்கு பாதுகாப்பான இடமாக திகழ்வது பெருமைக்குரியது. இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களில் 43% பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். இந்தியாவின் முன்னணிப் பட்டியலில் உள்ள 100 கல்லூரிகளில் 22 கல்லூரிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் பதிவு செய்யும் பொறியாளர்களின் எண்ணிக்கை 1.50 லட்சமாக உள்ளது. 250 பேருக்கு ஒரு டாக்டர் என்ற விகிதாச்சாரம் இங்குள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

The post இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களில் 43% பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: