நாட்டின் பாதுகாப்பு அமைப்புக்கு மிகவும் ஆபத்தானது அக்னிபாத் திட்டத்தில் சேர ரூ.100 கோடிக்கு மேல் வசூல்: காங். கடும் தாக்குதல்

புதுடெல்லி: அக்னிபாத் திட்டத்தில் சேர இளைஞர்களிடம் இருந்து ஒன்றிய அரசு ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. இளைஞர்கள் ராணுவம், விமானம், கடற்படை ஆகியவற்றில் 4 ஆண்டுகள் பணி புரியும் வகையில் அக்னிபாத் என்ற திட்டம் கடந்த 2022ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதற்கு தேர்வு செய்யப்படும் வீரர்கள் அக்னிவீரர்கள் என அழைக்கப்படுகின்றனர். இதிலுள்ள பல்வேறு குளறுபடிகள் காரணமாக திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோதே வடமாநிலங்களில் ரயில்கள், ரயில் நிலையங்கள், பேருந்துகள், வாகனங்களுக்கு தீ வைத்து எதிர்ப்பு கிளம்பியது. காங்கிரசும் இந்த திட்டத்தை எதிர்த்து வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் காங்கிரசின் முன்னாள் படைவீரர் துறைத்தலைவர் ஓய்வு பெற்ற கர்னல் ரோஹித் சவுத்ரி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “அக்னிபாத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் முன்பே 2019-22ம் ஆண்டுக்குள் ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் சேர பல்வேறு நடைமுறைகள் முடிந்து 1.5 லட்சம் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் அக்னிபாத் திட்டம் காரணமாக அவர்களின் ராணுவ கனவு சிதைந்து விட்டது. அவர்கள் அனைவரும் உடனே பணியில் சேர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அக்னிபாத் நாட்டின் பாதுகாப்பு அமைப்புக்கு மிகவும் ஆபத்தானது. மேலும் அக்னிபாத் திட்டத்தில் சேர பல்வேறு ஆள்சேர்ப்பு மையங்கள் மூலமாக ரூ.100 கோடிக்கு மேல் ஒன்றிய அரசு வசூலித்துள்ளது. அதுகுறித்த கணக்கை அரசு வௌியிட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

The post நாட்டின் பாதுகாப்பு அமைப்புக்கு மிகவும் ஆபத்தானது அக்னிபாத் திட்டத்தில் சேர ரூ.100 கோடிக்கு மேல் வசூல்: காங். கடும் தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: