விஜய் ஹசாரே டிராபி: முதல் முறையாக அரியானா சாம்பியன்

ராஜ்கோட்: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் பைனலில் ராஜஸ்தான் அணியுடன் மோதிய அரியானா அணி 30 ரன் வித்தியாசத்தில் போராடி வென்று கோப்பையை முத்தமிட்டது. சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த அரியானா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 287 ரன் குவித்தது. அங்கித் குமார் 88 ரன், கேப்டன் அஷோக் மெனரியா 70 ரன், நிஷாந்த் சிந்து 29, சுமித் குமார் 28*, ராகுல் திவாதியா 24, கீப்பர் ரோகித் சர்மா 20 ரன் எடுத்தனர். ராஜஸ்தான் பந்துவீச்சில் அனிகேத் 4, அராபத் 2, ராகுல் சாஹர் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 50 ஓவரில் 288 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் 19 ஓவரில் 80 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது.

இந்த நிலையில், அபிஜீத் தோமர் – குணால் சிங் ரத்தோர் ஜோடி அபாரமாக விளையாடி 5வது விக்கெட்டுக்கு 121 ரன் சேர்த்தது. தொடக்க வீரர் தோமர் 106 ரன் (129 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்), குணால் சிங் 79 ரன் (65 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி ஹர்ஷல் படேல் பந்துவீச்சில் வெளியேற, அரியானா கை ஓங்கியது. அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுக்க, ராஜஸ்தான் 48 ஓவரில் 257 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. ராகுல் சாஹர் 18 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அரியானா பந்துவீச்சில் ஹர்ஷல் படேல், சுமித் குமார் தலா 3, காம்போஜ், திவாதியா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 30 ரன் வித்தியாசத்தில் போராடி வென்ற அரியானா அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

The post விஜய் ஹசாரே டிராபி: முதல் முறையாக அரியானா சாம்பியன் appeared first on Dinakaran.

Related Stories: