தேனி ஜிஹெச்சில் நவீன தீவிர சுவாச சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

 

ஆண்டிபட்டி, டிச. : அரசு தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மயக்கவியல் துறையின் கீழ், பொது மருத்துவத்துறையின் ஒத்துழைப்போடு நவீன தீவிர சுவாச சிகிச்சைப் பிரிவு (IRCU) நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்த தீவிர சுவாச சிகிச்சைப் பிரிவு தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலசங்கர் தொடங்கி வைத்து பேசியதாவது: 10 படுக்கைகள் கொண்ட இப்பிரிவு செயற்கை சுவாசம் அளிக்கும் கருவிகள், மானிட்டர்கள், இன்பியூசன் பம்ப், டிபிப்ரிலேட்டர், மைய ஆக்சிஜன் மற்றும் சக்ஷன் ஆகிய நவீன மருத்துவ வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு சுமார் 160 விஷம் அருந்திய நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சுமார் 25 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கிறார்கள். பாம்பு கடிக்கு மாதம் சுமார் 70 பேர் சிகிச்சை பெற்றாலும், 3-4 நோயாளிகள் உயிரிழக்க நேரிடுகிறது.

மாதத்திற்கு சுமார் 10 பேர் தூக்கு போட்டு தற்கொலை முயற்சியில் இறங்கி அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களில் சுமார் 5 பேர் உயிரிழக்கிறார்கள். விஷக்கடி மற்றும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் இளம் அல்லது நடுத்தர வயதினர்களாகவே உள்ளனர். அவர்களில் செயற்கை சுவாசம் தேவைப்படுபவர்களுக்காக பிரேத்யேகமாக அனைத்து உயிர்காக்கும் கருவிகள் மற்றும் 24 மணி நேர மருத்துவர், செவிலியர் சிறப்பு கண்காணிப்பும் உள்ள தனி வார்டு இருந்தால் பல இளம் உயிரிழப்புக்களைத் தவிர்க்கலாம் என்ற உயரிய எண்ணத்துடனேயே இப்பகுதி தொடங்கப்பட்டுள்ளது என மருத்துவக்கல்லூரி முதல்வர் தெரிவித்தார். இந்நிகழ்வில், மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் செல்வகுமார், நிலைய மருத்துவ அலுவலர் சந்திரா, மயக்கவியல் துறைத்தலைவர் கண்ணன், மருத்துவத்துறை பேராசிரியர் வெங்கடேஷ் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

The post தேனி ஜிஹெச்சில் நவீன தீவிர சுவாச சிகிச்சைப் பிரிவு தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: