திண்டுக்கல், டிச. 8: திண்டுக்கல்லில் தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். மாநில தலைவர் செல்ல பாண்டியன் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் புதியவன், மாநில பொருளாளர் ரங்கராஜ் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 1,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் 33 ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர் உருவாக்கிய மக்கள் நல பணியாளர்கள் 13,500 உள்ளனர். மக்கள் நல பணியாளர்களை காலமுறை ஊதியத்தில் பணி வரையறையுடன் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வாய்மொழியாக நியமிக்கப்பட்ட எங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு கொடுத்த காலமுறை ஊதியத்தை பறித்து தொகுப்பூதியம் கொடுப்பதை ரத்து செய்ய வேண்டும் என்பது பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் இருந்து ஊர்வலமாக பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு, காமராஜ் சிலை அருகே சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. டிஎஸ்பி கோகுல கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்ல மறுத்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். இதில் 600க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
The post திண்டுக்கல்லில் மக்கள் நல பணியாளர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்: 600 பேர் கைது appeared first on Dinakaran.
