மாநில கலை விழா போட்டிகளில் தர்மபுரி மாணவர்கள் சாதனை

தர்மபுரி, டிச.4: தர்மபுரி மாவட்டத்தில் இருந்து மாநில கலைத்திருவிழா போட்டிகளில் 412பேர் பங்கேற்றதில், 11 மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். கதை எழுதுதல், செதுக்குச்சிற்பம், நடனத்தில் முதலிடம் பெற்றுள்ளனர். அவர்களுக்கு தமிழக முதல்வர் பரிசு, சான்றிதழ் வழங்குகிறார்.

தமிழக அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் கல்வித் திறனோடு, கலைத் திறனைக் கண்டறியும் வகையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை கலைத் திருவிழாவை நடத்த முடிவு செய்தது. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகளுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதையடுத்து, கடந்த கல்வி ஆண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நடனம், நாடகம், இசை, கட்டுரை எழுதுதல், ஓவியம், கதை எழுதுதல், சிற்பம் செய்தல், பேச்சு போட்டி, இசைக் கருவி வாசித்தல், திருக்குறள் ஒப்பித்தல், புகைப்படம் எடுத்தல், பல குரல் பேச்சு, விவாத மேடை பட்டிமன்றம் உள்ளிட்ட 188க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான கலைத் திருவிழா போட்டிகள், முதற்கட்டமாக பள்ளிகள் அளவில் நடத்தப்பட்டன. இதில், 90 ஆயிரம் மாணவ, மாணவிகள் இந்த கலைத்திருவிழா போட்டிகளில் பங்கேற்றனர். இதில் முதல் மூன்று இடங்களில் 17ஆயிரம் மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர். இவர்கள் வட்டார அளவில் போட்டிகளில் பங்கேற்றனர். இதில் முதல் இரண்டு இடங்களை பிடித்த 1172பேர் வெற்றி பெற்றனர். இந்த 1172 பேரும் மாவட்ட அளவில் போட்டிகளில் பங்கேற்றனர். இந்த மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்று வெற்றி பெற்ற 412பேர் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். அரசுப் பள்ளிகளுக்கு இடையே மாநில அளவில் நடந்த கலைத் திருவிழா போட்டிகள் வேலூர், செங்கல்பட்டு, திருச்சி ஆகிய மாவட்டங்களில், கடந்த 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடந்தது.

குறிப்பாக, 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கான போட்டிகள், வேலூர் மாவட்டத்திலும், 9ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கான போட்டிகள் செங்கல்பட்டு மாவட்டத்திலும், 11, 12ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கான போட்டிகள் திருச்சி மாவட்டத்திலும் நடைபெற்றது. மாநில அளவிலான இப்போட்டிகளை மூன்று மாவட்டங்களிலும் நடத்த ₹89 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. தர்மபுரி மாவட்டத்தில் இருந்து மாநில போட்டிக்கு 412 பேர் கலந்து கொண்டனர். இதில் 11 மாணவ, மாணவிகள் மாநில அளவில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றனர். காரிமங்கலம் மோட்டலூர் அரசு பள்ளி மாணவன் தனிஷ் கதை எழுதல் (ஆங்கிலம்) போட்டியில் மாநிலத்தில் முதலிடம் பெற்றார்.

ஏரியூர் சிடுவம்பட்டி அரசு பள்ளி மாணவன் புகழ் செதுக்கு சிற்பம் (காய்கறி, சோப்பு) போட்டியில் மாநிலத்தில் முதலிடமும், தர்மபுரி அளேதர்மபுரி அரசு பள்ளி மாணவன் விஜய் மேற்கத்திய நடனத்தில் முதலிடமும், தர்மபுரி அரசு பள்ளி பள்ளி மாணவி திவ்யா கட்டுரைப்போட்டியில் (ஆங்கிலத்தில்) 2ம் இடமும், நல்லம்பள்ளி அரசு பள்ளி மாணவி பிரியாமணி கட்டுரைப்போட்டியில் (தமிழ்) 2ம் இடமும், இலக்கியம்பட்டி அரசு பள்ளி மாணவி மஞ்சுஸ்ரீ செவ்வியல் நடனத்தில் 2ம் இடமும், தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஹாரினி நாட்டுப்புற நடனத்தில் (தனி) 2ம் இடமும், பாப்பிரெட்டிப்பட்டி பையர்நத்தம் அரசு பள்ளி மாணவன் ராமகிருஷ்ணன் கொம்புத்தாரை என்ற போட்டியில் 2ம் இடமும், நல்லம்பள்ளி கமலநத்தம் அரசு பள்ளி மாணவி சர்மிளா கட்டுரைப்போட்டியில் (ஆங்கிலம்) 3ம் இடமும், பாப்பாரப்பட்டி அரசு மகளிர் பள்ளி மாணவி தனுஸ்ரீ பேச்சுப்போட்டி (ஆங்கிலம்) 3ம் இடமும், கடத்தூர் அரசு பள்ளி மாணவன் சுதேசி மேற்கத்திய நடனத்தில் 3ம் இடமும் பிடித்தனர். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் நடத்தப்பட்ட கலைத்திருவிழா பள்ளிகளுக்கு இடையே நடந்த போட்டியில் 90,000 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இறுதியாக மாநில அளவிலான போட்டியில் 412 பேரில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 11 மாணவ, மாணவிகள் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். மாநில அளவில் வெற்றி இவர்களுக்கு, தமிழக முதல்வர் பரிசு வழங்குவார். மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன.

அத்துடன் கலையரசன், கலையரசி என்ற விருதுகளும் வழங்கப்பட உள்ளன. மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள், தர வரிசை அடிப்படையில் முதல் 20 மாணவ, மாணவிகள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

The post மாநில கலை விழா போட்டிகளில் தர்மபுரி மாணவர்கள் சாதனை appeared first on Dinakaran.

Related Stories: