பழநி சுற்றுலா பஸ் நிலையத்தில் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதாரக்கேடு

*சுகாதாரத்தை மேம்படுத்த கோரிக்கை

பழநி :பழநி கோயிலுக்கு தற்போது ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. தொடர்ந்து தைப்பூசம், பங்குனி உத்திரம், கோடை விடுமுறை என வரும் மே மாதம் வரை பழநி அடிவார பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இவ்வாறு வரும் பக்தர்கள் பெரும்பாலானோர், ஒரு குழுவாகவே வருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்துவதற்காக கிழக்கு கிரிவீதியில் கோயில் நிர்வாகத்தால் சுற்றுலா பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பஸ் நிலையத்தை சுற்றிலும் இலவச ஓய்வு மண்டபங்கள், கழிப்பறைகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

எனினும், பக்தர்கள் திறந்த வெளியில் பஸ் நிலைய வளாகத்திலேயே சமையல் செய்து சாப்பிட்டு வருகின்றனர். சாப்பிட்டதும் இலை போன்ற எச்சில் கழிவுகளை அதே இடத்தில் போட்டு விட்டு செல்கின்றனர். இதனால் அதனை உண்ண வரும் மாடு மற்றும் நாய் போன்ற விலங்குகளின் நடமாட்டமும் இப்பகுதியில் அதிகளவு அதிகரித்துள்ளது. இதனால் இப்பகுதியில் சுகாதாரக் கேடான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், சுற்றுலா பஸ் நிலையத்தின் கிழக்குப்பகுதியில் குப்பைகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் கடும் துர்நாற்றம் ஏற்படுகிறது. ஓய்வு மண்டபங்கள் திறக்கப்படாததால் அருகில் உள்ள தனியார் தங்கும் மண்டபங்களில் பக்தர்கள் அதிக கட்டணம் கொடுத்து தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, திருக்கோயில் நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் சாலைகளில் சமைப்பவர்களை கண்காணித்து, குப்பைகளை ஒரே இடத்தில் போட வைப்பது, குப்பைகளை தேங்க விடாமல் கூடுதல் ஆட்களை கொண்டு உடனுக்குடன் அள்ளுவது போன்ற பணிகளில் ஈடுபட வேண்டுமென்று பக்தர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.தவிர, தங்கும் மண்டபங்களை திறந்து பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பஸ் நிலையத்தை அடிக்கடி தூய்மை செய்ய வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பழநி சுற்றுலா பஸ் நிலையத்தில் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதாரக்கேடு appeared first on Dinakaran.

Related Stories: