செங்கோட்டை- தாம்பரம் எக்ஸ்பிரசில் கூடுதல் ஸ்லீப்பர் பெட்டி இணைப்பு: பயணிகள் மகிழ்ச்சி

நெல்லை: செங்கோட்டையில் இருந்து நெல்லை வழியாக பயணிக்கும் தாம்பரம் எக்ஸ்பிரசில் கூடுதலாக ஒரு ஸ்லீப்பர் கோச் இணைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
சென்னை தாம்பரத்தில் இருந்து ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர் காரைக்குடி, அருப்புக்கோட்டை, நெல்லை, அம்பை வழியாக, செங்கோட்டைக்கு அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 20683) ஏப்ரல் 8ம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயிலில் தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு முன்பதிவு கட்டணமாக 240 ரூபாயும், தூங்கும் வசதி உள்ள பெட்டியில் 435 ரூபாயும், மற்றும் மூன்றடுக்கு ஏசி கோச்சில் 1060 ரூபாயும், இரண்டடுக்கு ஏசி கோச்சில் 1620 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த ரயிலில் மொத்தம் 17 ரயில் பெட்டிகள் உள்ளன. அவற்றில் 3 முன்பதிவில்லா பெட்டியும், 2 இரண்டடுக்கு குளிர்சாதனப்பெட்டியும், 5 மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டியும், 5 தூங்கும் வசதியுள்ள பெட்டியும் இணைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் ஓடுகின்ற பெரும்பாலான ரயில்களில் ஸ்லீப்பர் கோச் மட்டுமே அதிகமாக இருக்கும். ஏசி கோச்சுகள் மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கும். ஆனால் இந்த ரயிலில் மட்டும் மற்ற ரயில்களை விட குறைந்த அளவு ஸ்லீப்பர் கோச்சுகள் இணைக்கப்பட்டிருந்தன. இதனால் 400 ரூபாய் கொடுத்து ஸ்லீப்பர் கோச்சில் செல்பவர்கள், 1060 ரூபாய் கொடுத்து ஏசி கோச்சில் செல்ல சற்று தயக்கம் காட்டி வந்தனர். மேலும் இந்த ரயிலானது நீண்ட சுற்றுப்பாதையில் இறங்கி வருவதால் தாம்பரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டால் செங்கோட்டை சென்றடைய காலை 11 மணி ஆகிறது. இதனால் செங்கோட்டைக்கு செல்லும் பயணிகள் குறைந்த அளவே பயணித்தனர்.

இதன் காரணமாக பல நாட்களாக ஸ்லீப்பர் கோச்சைவிட ஏசி கோச்சானது காலியாக காணப்பட்டது. எனவே இந்த ரயிலில் கூடுதலாக 2 அல்லது 3 ஸ்லீப்பர் கோச்சுகள் இணைக்கப்பட வேண்டும் என்று தென் மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையினை பரிசீலித்த ரயில்வே நிர்வாகமானது, தற்போது இந்த ரயிலில் உள்ள இரண்டடுக்கு ஏசி பெட்டி ஒன்றை குறைத்து விட்டு, அதற்கு பதிலாக கூடுதலாக ஒரு ஸ்லீப்பர் கோச் (S-6) பெட்டியினை இணைத்துள்ளது. இதனால் தென் மாவட்ட ரயில் பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post செங்கோட்டை- தாம்பரம் எக்ஸ்பிரசில் கூடுதல் ஸ்லீப்பர் பெட்டி இணைப்பு: பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: