தமிழ்நாட்டில் பருவமழை தீவிரமாக பெய்து வருவதையடுத்து, கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் நவம்பர் 22ம் தேதி வரை 264.4 மிமீ மழை பெய்துள்ளது. (இயல்பு 311.9 மிமீ பெய்ய வேண்டும்). இது இயல்பைவிட 15 சதவீதம் குறைவு. இந்நிலையில், நேற்றைய மழை பொழிவில் அதிகபட்சமாக திருப்பூரில் 167 மிமீ மழை பெய்துள்ளது. மேலும், நேற்றைய நிலவரப்படி தென் தமிழகத்தில் அனேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது.அதிகபட்ச மழை திருப்பூரில் பெய்துள்ளது.
தண்டையார்பேட்டை, கத்திவாக்கம், ராயபுரம், மாதவரம், அம்பத்தூர், எண்ணூர், நுங்கம்பாக்கம், டிஜிபி அலுவலகம், பெரம்பூர், பொன்னேரி, அயனாவரம், சென்னை ஆட்சியர் அலுவலகம், சோழிங்கநல்லூர், வில்லிவாக்கம், அண்ணா நகர், நந்தனம், திருவொற்றியூர், மணலி, தேனாம்பேட்டை, அடையாறு, கோடம்பாக்கம், பெருங்குடி, மாமல்லபுரம், ஆகிய இடங்களில் 30மிமீ முதல் 50மிமீ வரை மழை பெய்துள்ளது.
உள்தமிழகம் மற்றும் அதையொட்டிய கேரளப் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் 26ம் தேதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 27ம் தேதியில் தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவக் கூடும்.
அதன் காரணமாக தமிழகத்தில் அனேக இடங்களிலும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதே நிலை 25ம் தேதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையோ அல்லது கனமழையோ பெய்யும். அத்துடன், தெற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
The post தெற்கு அந்தமான் கடல் பகுதியில் 26ம் தேதி காற்றழுத்தம் உருவாகும்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.
