கூடலூர் : தேனி மாவட்டம் கூடலூர் அருகே வெட்டுக்காடு வனப்பகுதியை ஒட்டிய வாழைத்தோட்டத்திற்குள் புகுந்த காட்டுயானைகள் நூற்றுக்கணக்கான வாழைமரங்களை சேதப்படுத்தின.
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள வெட்டுக்காடு, காஞ்சிமரத்துறை, கடமான்குளம் உள்ளிட்ட பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளாக உள்ளது. இந்த பகுதிகளில் அதிக அளவில் தென்னை, வாழை மற்றும் பீட்ரூட், முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
இந்த விவசாய நிலத்தினை ஒட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளதால், அவ்வப்போது யானை, மான், காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து நிலத்தை சேதப்படுத்துவது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வண்ணாத்திப்பாறை வனப்பகுதியை ஒட்டி வெட்டுக்காட்டில் உள்ள பகவத், அஜ்மத் ஆகியோரது வாழைத்தோட்டத்திற்குள் புகுந்த காட்டுயானைகள் அங்கிருந்த ஏராளமான வாழை மரங்களை ஒடித்து சேதப்படுத்தியது. இதுகுறித்து விவசாயிகள் வனத்துறையிடம் தகவல்தெரிவித்துள்ளனர்.
குலைவெட்டும் பருவத்தில் உள்ள வாழைகளை காட்டுயானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகளுக்கு அதிக இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், நான்காயிரத்திற்கும் அதிகமான பச்சைவாழை சாகுபடி செய்துள்ளோம். விவசாய நிலத்திற்குள் யானைகள்வராமல் இருக்க தோட்டத்தில் சோலார் மின்வேலியும் அமைத்துள்ளோம். ஆனால் காட்டுயானைகள் சோலார் மின்வேலியை சேதப்படுத்தி தோட்டத்திற்குள் புகுந்து ஏராளமான வாழைகளை சேதப்படுத்தி சென்றுள்ளது. பலனெடுக்கும் பருவத்தில் உள்ள வாழைகளை காட்டுயானைகள் சேதப்படுத்தியதால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றனர்.
The post கூடலூர் அருகே விவசாய நிலத்திற்குள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தி காட்டுயானைகள் அட்டூழியம் appeared first on Dinakaran.
