தமிழகத்தில் களைகட்டிய தீபாவளி மதுபான விற்பனை: கடந்த 2 நாட்களில் ரூ.467.69 கோடி அள்ளிய டாஸ்மாக் நிர்வாகம்..மதுரை முதலிடம் பிடித்தது..!!

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் இரு நாட்களில் ரூ.467.69 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. நாடு முழுவதும் இந்தாண்டு நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகை மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியது. இதனிடையே தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற விடுமுறை நாட்களில் மது விற்பனை என்பது வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். விடுமுறை என்பதால் இந்த சமயத்தில் மது விற்பனை அதிகமாக இருக்கும்.

தீபாவளி உள்ளிட்ட எந்த பண்டிகை என்றாலும் ஆடை, ஆபரணங்கள், பலகாரங்கள், இறைச்சி விற்பனை விவரம் வெளியாகிறதோ இல்லையோ மதுபானம் விற்பனை விவரம் வெளியாகிவிடுகிறது. அந்த வகையில், இந்தாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் இரு நாட்களில் ரூ.467.69 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

தீபாவளிக்கு முந்தைய தினமான நவம்பர் 11 மற்றும் தீபாவளி தினமான நவம்பர் 12 ஆகிய நாட்களில் மொத்தம் ரூ.467.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 11ல் ரூ.221 கோடிக்கும், நவம்பர் 12ல் ரூ.246 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றிருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை, திருச்சியில் அதிகளவில் மது விற்பனை:

தீபாவளிக்கு முந்தைய நாளில் மதுரை மண்டலத்திலும், தீபாவளியன்று திருச்சி மண்டலத்திலும் அதிக மது விற்பனை நடந்துள்ளது. நவம்பர் 11-ல் தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.52.73 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது. தீபாவளி நாளான நேற்று தமிழ்நாட்டில் அதிகபட்சமாக திருச்சி மண்டலத்தில் ரூ.55.60 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

அதாவது, நவம்பர் 11ல் மதுரை- ரூ.52.73கோடி, சென்னை- ரூ.48.12 கோடி, கோவை – 40.20, திருச்சி – ரூ.40.02கோடி, சேலம் – ரூ.39.78 கோடி விற்பனை செய்யப்பட்டது. நவம்பர் 12ல் திருச்சி – ரூ.55.60, சென்னை – ரூ.52.98, மதுரை-ரூ.51.97 கோடி,சேலம் – ரூ.46.62கோடி, கோவை – ரூ.39.61கோடி விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களில் அதிகபட்சமாக திருச்சி மண்டலத்தில் ரூ.95.62 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

The post தமிழகத்தில் களைகட்டிய தீபாவளி மதுபான விற்பனை: கடந்த 2 நாட்களில் ரூ.467.69 கோடி அள்ளிய டாஸ்மாக் நிர்வாகம்..மதுரை முதலிடம் பிடித்தது..!! appeared first on Dinakaran.

Related Stories: