ஒன்றிய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கக்கூடாது: தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: ராமநாதபுரம், அரியலூர் மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மேற்கொள்ள ஒன்றிய அரசு முயற்சிப்பதை தமிழக அரசு அனுமதிக்க கூடாது என்று தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்): ராமநாதபுரம் மாவட்டம், அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதிகோரி ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தில் அனுமதி கோரி உள்ளது. ஹைட்ரோகார்பன் கிணறுகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் தலைமையிலான நிபுணர் குழுவும் அரசிடம் அறிக்கை அளித்துள்ளது. தமிழ்நாடு அரசு, ஓஎன்ஜிசி நிறுவனத்தின் விண்ணப்பத்தை நிராகரிப்பதுடன், ராமநாதபுரம் மாவட்டம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒன்றிய அரசு மேற்கொள்ள முயற்சிப்பதை அனுமதிக்கக் கூடாது.

ஜி.கே.வாசன் (தமாகா): . ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக தொழில் நுட்ப வசதியுடன் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்கும் போது நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விவசாய நிலங்கள் பயன்படுத்த முடியாத நிலை உருவாகும். எனவே அனுமதி வழங்க கூடாது.

திருமாவளவன் (விசிக தலைவர்): முதல்வரே ஹைட்ரோகார்பன் கிணறுகளை அனுமதிக்க முடியாது என அறிவித்த பின்னரும் தமிழ்நாட்டில் புதிய கிணறுகளை அமைக்க முயல்வது ஜனநாயக விரோதமானதாகும். உடனடியாக ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் அனுமதி கோரும் விண்ணப்பத்தை தமிழ்நாடு அரசு மறுதலிக்க வேண்டும். தமிழ்நாட்டில் வேறு எந்த மாவட்டத்திலும் ஹைட்ரோகார்பன் திட்டங்களை ஒன்றிய அரசு செயல்படுத்துவதை தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது. இதேபோல் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன், எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்டோரும் தெரிவித்துள்ளனர்.

The post ஒன்றிய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கக்கூடாது: தலைவர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: