தீபாவளி இனிப்பு-காரம் தயாரிப்பில் விதி மீறினால் சட்டப்படி நடவடிக்கை

*விழிப்புணர்வு கூட்டத்தில் எச்சரிக்கை

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் பதிவு சான்று இல்லாமல் தீபாவளி இனிப்பு-காரம் தயாரித்து விநியோகித்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிகமாக இனிப்பு மற்றும் காரம் தயாரித்து விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் தர்மபுரியில் நேற்று நடைபெற்றது.

உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் பானுசுஜாதா தலைமை வகித்தார். ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் வரவேற்றார். தர்மபுரி ஓட்டல் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ராதாகிருஷ்ணன், செயலாளர் வேணுகோபால் முன்னிலை வகித்தனர். ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால், கந்தசாமி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். கூட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் பானுசுஜாதா பேசியதாவது:

உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்றுகள் இல்லாமல் உணவு பொருட்கள், தீபாவளி பலகாரங்கள் இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பது-விநியோகிப்பது, விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவு வணிகர்கள், பேக்கரி தயாரிப்பாளர்கள், விநியோகிப்பாளர்கள், விற்பனையாளர்கள் தனியார் மண்டபங்களில் தற்காலிகமாக இனிப்பு, பலகாரம் தயாரித்து விற்பனை செய்பவர்கள் என அனைவரும், உணவு பாதுகாப்பு துறையில் லைசென்ஸ் பெற்று வணிகம் செய்ய வேண்டும். உணவு தயாரிக்கும் பணியாளர்கள் தன் சுத்தம் பராமரிப்புடன், சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

சமையல் எண்ணெய் மற்றும் மூலப்பொருட்கள் தரமானதாக இருக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பொட்டலமிடும் பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேதி-முடிவு தேதி, தயாரிப்பு முகவரி, நுகர்வோர் புகார் தொடர்பு எண் மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் எண் ஆகியவை கண்டிப்பாக இருக்க வேண்டும். உணவுப்பொருட்கள், இனிப்பு, காரங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக நிறமூட்டிகள் சேர்ப்பதோ, பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் உபயோகப்படுத்துவதோ, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்துவதோ கூடாது. சமையல் எண்ணெயை ஒரு முறைக்கு மேல் பயன்படுத்த கூடாது. காட்சிப்படுத்தப்படும் இனிப்பு வகைகளில் முடிவு தேதி குறிப்பிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், உணவு தயாரிப்பவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், வழிமுறைகள் அடங்கிய பிரசுரங்கள் மற்றும் வழிமுறைகள் அடங்கிய விழிப்புணர்வு கையேடுகள் வழங்கப்பட்டது. உணவு பாதுகாப்பு குறித்த புகார்களுக்கு 9444042322 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தர்மபுரி மற்றும் காரிமங்கலம், பாலக்கோடு, மொரப்பூர், கடத்தூர், கம்பைநல்லூர், திப்பம்பட்டி, நல்லம்பள்ளி, பாப்பாரப்பட்டி உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த பேக்கரி மற்றும் இனிப்பக, கார, உணவு வணிகர்கள் பங்கேற்றனர்.

The post தீபாவளி இனிப்பு-காரம் தயாரிப்பில் விதி மீறினால் சட்டப்படி நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: