காஞ்சிபுரம் மாநகராட்சி பள்ளியை சேர்ந்த ‘மாணவர் காவல் படை’ மாணவர்கள் மாமல்லபுரம் வருகை: புராதன சின்னங்களை கண்டு ரசித்தனர்

மாமல்லபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி ‘‘மாணவர் காவல் படை’’ மாணவர்கள் மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்தனர். குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் வேளையில் இளம் தலைமுறையினரை நல்வழிப்படுத்தும் நோக்கில், பள்ளி பருவத்திலேயே விழிப்புணர்வையும் நற்சிந்தனையையும் வளர்க்க கல்வி துறையும், காவல் துறையும் இணைந்து பள்ளி மாணவர்களை தயார் செய்ய தமிழக காவல் துறையில் முதன் முதலாக மாணவர் காவல் படை கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார் பாளையம் சேர்மன் சாமிநாத முதலியார் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர் காவல் படை மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் பள்ளி தலைமை ஆசிரியர் கமலக்கண்ணன் தலைமையில், உதவி தலைமை ஆசிரியர் பூவரசு, ஆசிரியை சுமித்ரா, உடற்கல்வி ஆசிரியர் லட்சுமி நாராயணன் ஆகியோர் நேற்று மாமல்லபுரம் அழைத்து வந்தனர்.

பின்னர், காவல் படை மாணவர்கள் கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜூணன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து செல்பி மற்றும் குழுப் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, சுற்றுலா வழிகாட்டி ஒருவர் புராதன சின்னங்கள் எந்த காலத்தில் எந்த மன்னரால் செதுக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை காவல் படை மாணவர்களுக்கு தெளிவாக விளக்கி கூறினார்.

The post காஞ்சிபுரம் மாநகராட்சி பள்ளியை சேர்ந்த ‘மாணவர் காவல் படை’ மாணவர்கள் மாமல்லபுரம் வருகை: புராதன சின்னங்களை கண்டு ரசித்தனர் appeared first on Dinakaran.

Related Stories: