அரவக்குறிச்சி சார்பதிவாளர் ஆபீசில் விடிய விடிய நடந்த சோதனையில் ரூ.1.17 லட்சம் பறிமுதல்

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விடிய விடிய சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.1.17 லட்சம் கைப்பற்றப்பட்டது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் அரவக்குறிச்சி பேரூராட்சி, பள்ளபட்டி நகராட்சி மற்றும் அரவக்குறிச்சி ஒன்றியத்திலுள்ள 20 ஊராட்சிகள் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள நிலங்கள் பதிவு செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் கரூர் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி இமயவர்மன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் திடீரென்று சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்தனர்.

பின்னர் அலுவலகம் முழுவதும் துருவி துருவி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அலுவலகத்தில் சார்பதிவாளர் சக்திவேல் உள்ளிட்ட அலுவலர்கள் இருந்தனர். இந்த சோதனையின்போது கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 500 கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணி வரை சோதனை நடத்தினர். இதில் கைப்பற்றப்பட்ட பணத்துக்கு உரிய கணக்கு இல்லை என கூறப்படுகிறது. இதையடுத்து கரூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராக வேண்டும் என சார் பதிவாளர் சக்திவேலுக்கு டிஎஸ்பி இமயவரம்பன் உத்தரவிட்டு சென்றார்.

The post அரவக்குறிச்சி சார்பதிவாளர் ஆபீசில் விடிய விடிய நடந்த சோதனையில் ரூ.1.17 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: