இந்திய ராணுவத்துக்கு 156 அப்பாச்சி ஹெலிகாப்டர்: அடுத்தாண்டு பிப்ரவரியில் ராணுவத்தில் இணைப்பு


புதுடெல்லி: இந்திய ராணுவத்துக்கு 156 அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர் வாங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இவைகள் அடுத்தாண்டு பிப்ரவரியில் ராணுவத்தில் இணைக்கப்படுகிறது. இந்திய ராணுவத்துக்கான ‘ஏஹெச்-64இ’ அப்பாச்சி போர் ஹெலிகாப்டரை தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டிருப்பதாக அமெரிக்காவின் மிக பெரிய விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் தெரிவித்தது. கடந்த 2020ம் ஆண்டு இந்திய விமான படைக்கு ‘22 இ’ ரக அப்பாச்சி ஹெலிகாப்டரை தயாரித்து வழங்கும் பணியை அமெரிக்காவின் மிக பெரிய விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறைவு செய்தது. இந்நிலையில், புதிதாக இந்திய ராணுவத்துக்கு ‘ஏஹெச்-64இ’ ரக அப்பாச்சி ஹெலிகாப்டர்களை தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை அந்த நிறுவனத்துடன் இந்தியா மேற்கொண்டது.

ஒப்பந்தப்படி, இந்த ஹெலிகாப்டர்கள் தயாரிப்பு பணியை நிறைவுசெய்து 2024ம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்திடம் போயிங் நிறுவனம் ஒப்படைக்க வேண்டும். அந்த வகையில், தயாரிப்பு பணிகளை அந்த நிறுவனம் தொடங்கியுள்ளது. உலகின் முன்னணியில் இருக்கும் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய போர் ஹெலிகாப்டராக இந்த ‘ஏஹெச்-64இ’ கருதப்படுகிறது. பகலில் மட்டுமின்றி இரவிலும் இந்த ஹெலிகாப்டரை இயக்க முடியும். ரேடார் தொழில்நுட்ப உதவியுடன் இலக்குகளை மிக துல்லியமாக தாக்கி அளிக்கும் திறன் கொண்டது. 5,352 கிலோ எடைகொண்டது. 49.11 அடி நீளமும், 17.16 அடி அகலமும், 16.24 அடி உயரமும் உடையதாகும். தலா 45 கிலோ எடையுடைய 16 ஏஜிஎம் ரக ஏவுகணைகள் மற்றும் அதனை ஏவுவதற்கான ராக்கெட் கருவியை இதில் எடுத்து செல்ல முடியும். நிமிடத்துக்கு 625 முறை சுடும் திறன்கொண்ட செயின் தோட்டாக்களுடன் இணைக்கப்பட்ட 30 மி.மீ. துப்பாக்கியும் இதில் இடம்பெற்றிருக்கும்.

இந்த ஹெலிகாப்டரை இயக்கியவுடன் ஒரே நிமிடத்தில் 2,415 அடி உயரத்துக்கு செல்ல முடியும். அதிகபட்சமாக 9,478 அடி உயரம் வரை சென்று பறக்க முடியும். ஒரு முறை நிரப்பப்பட்ட எரிபொருளுடன் 1,900 கி.மீ. தூரம் பறக்கும் திறன் கொண்டது. மொத்தம் 156 அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்களை இந்திய ராணுவத்திற்கு வாங்க திட்டமிட்டுள்ளது. இது அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் ராணுவத்தில் இணைக்கப்பட உள்ளது. அமெரிக்க ராணுவத்தில் இந்த ஹெலிகாப்டர் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்தியாவை தவிர எகிப்து, கிரீஸ், இந்தோனேசியா, இஸ்ரேல், ஜப்பான், கொரியா, குவைத், நெதர்லாந்து, கத்தார், சவூதி அரேபியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிரிட்டன் நாடுகள் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் உள்ளன.

The post இந்திய ராணுவத்துக்கு 156 அப்பாச்சி ஹெலிகாப்டர்: அடுத்தாண்டு பிப்ரவரியில் ராணுவத்தில் இணைப்பு appeared first on Dinakaran.

Related Stories: