டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபுவை நியமிக்கும் தமிழக அரசின் பரிந்துரையை மீண்டும் நிராகரித்தார் ஆளுநர்

சென்னை: டிஎன்பிஎஸ்சி தலைவராக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவை நியமிக்கும் தமிழக அரசின் பரிந்துரையை மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்து உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (டிஎன்பிஎஸ்சி) காலியாக உள்ள டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் 10 உறுப்பினர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைளில் தமிழக அரசு இறங்கியது. இதைத் தொடர்ந்து புதிய தலைவர் மற்றும் 10 உறுப்பினர்களை தேர்வு செய்து ஒப்புதலுக்காக தமிழக அரசு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கோப்புகளை அனுப்பி வைத்தது. அதில் டிஎன்பிஎஸ்சி தலைவராக கடந்த ஜூன் 30ம் தேதி ஓய்வு பெற்ற முன்னாள் போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபுவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி சுமார் ஒரு மாதமாக கோப்புகளை கிடப்பில் போட்டு வைத்து இருந்தார். ஆகஸ்ட் 22ம் தேதி திருப்பியனுப்பினார்.

தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்ட விளக்கங்களை கோப்பாக தயாரித்து தமிழக அரசு ஆகஸ்ட் 31ம் தேதி மீண்டும் திரும்ப அனுப்பியது. அதில் ஆளுநர் கேட்ட விளக்கங்கள் அதில் இடம் பெற்று இருந்தது. இந்த நிலையில் 2வது முறையாகவும் டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம் செய்வதற்கான கோப்புகளை ஆளுநர் ஆர்.என்.ரவி திரும்பி அனுப்பியுள்ளார். அதில், டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவியில் 62 வயது வரையில் மட்டுமே இருக்க முடியும். ஆனால் சைலேந்திர பாபுவுக்கு தற்பொழுது 61 வயது ஆகிறது. எனவே, அவருக்கு வழங்க முடியாது. மேலும் தலைவர் தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளின்படி வெளிப்படை தன்மையுடன் நடைபெறவில்லை. எனவே, வேறு ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்று ஆளுநர் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல, டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினராக சிவகுமார் என்பவரை நியமிக்க, தமிழக அரசு அனுப்பிய பரிந்துரையையும், கவர்னர் நிராகரித்து உள்ளார். தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி 2வது முறையாக நிராகரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபுவை நியமிக்கும் தமிழக அரசின் பரிந்துரையை மீண்டும் நிராகரித்தார் ஆளுநர் appeared first on Dinakaran.

Related Stories: