வெடி பொருளின் அளவை பொருத்து மாநகர் காவல் ஆணையர் அல்லது வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி அல்லது தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரியிடம் பட்டாசு கடை வைக்க அனுமதி பெற வேண்டும். தீயணைப்பு துறை, கடை அமையும் நிலத்தின் உரிமையாளர், சம்பந்தப்பட்ட போலீசாரிடம் தடையில்லா சான்று பெற்று மனுவுடன் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும். தற்காலிக பட்டாசு கடைகளை பொறுத்தவரை பொதுமக்கள் வசிப்பிடங்களில் இருந்து 50 மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும்.
ஒரு கடைக்கும் மற்றொரு கடைக்கும் குறைந்தபட்சம் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். எளிதில் தீப்பற்றாத பொருட்களால் கடைகள் அமைக்க வேண்டும். வெளிநபர்கள் உள்ளே நுழைந்துவிடாதபடி கடை முற்றிலும் அடைக்கப்பட்டிருக்க வேண்டும். எதிரெதிரில் பட்டாசு கடை அமைந்திருக்கக்கூடாது. கடை அமைந்திருக்கும் பகுதியிலிருந்து 50 மீட்டர் தொலைவில் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது. ஒரே நேரத்தில் 50 கடைக்கும் அதிகமாக அனுமதி வழங்க கூடாது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசு வெடிக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் கடந்த 2005ல் உத்தரவிட்டது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அதிகமான சத்தம் கொண்ட வெடிபொருட்களை தயாரிப்பதும், வெடிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. சாதாரண வெடியில் சத்தம் 125 டெசிபலுக்கு அதிகமாகவும், வாணவெடியில் 90 டெசிபல் அதிகமாகவும் இருக்கக்கூடாது என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்ட விதிகளை பின்பற்றி உரிமம் வழங்கினாலே விபத்துகளை தடுக்க முடியும். மேலும் பட்டாசு கடை உரிமம் வழங்குவதற்கு முன்பு கடை அமையவுள்ள இடத்தை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்த பிறகே உரிமம் வழங்க வேண்டும்.
அந்த வகையில் திருத்தணி வருவாய் கோட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி 15க்கும் மேற்பட்ட தற்காலிக பட்டாசு கடைகள் வைப்பதற்கு கடையின் உரிமையாளர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். இதுவரை வருவாய் கோட்டாட்சியரிடம் கொடுத்துள்ள விண்ணப்பங்கள் மீது திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா, தாசில்தார் மதன், சட்ட ஒழுங்கு ஒழுங்கு சப் இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி, வருவாய் ஆய்வாளர் கமல் மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரி ஆகியோர் திருத்தணி நகரில் 4 இடங்களில் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
அப்போது கோட்டாட்சியர் தீபா கடை உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தி, கடையின் முன்பு எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் எதுவும் வைக்கக் கூடாது, தண்ணீர் மற்றும் மண் வாளியை தயாராக வைத்திருக்க வேண்டும். பட்டாசுகளை விற்பனை செய்யும் போது போதிய எச்சரிக்கையுடன் விற்க வேண்டும்.
குழந்தைகள் பட்டாசுகள் வாங்க வரும்போது கவனமாக செயல்பட வேண்டும். விபத்தில்லா தீபாவளியாக கொண்டாட வேண்டும். அரசு விதிமுறைகளின் படி பட்டாசுகள் விற்பனை செய்ய வேண்டும் போன்ற பல்வேறு அறிவுரைகளை வழங்கினர். ஆய்வின்போது வருவாய்த்துறை ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் உடனிருந்தனர்.
The post தீபாவளி பண்டிகையையொட்டி திருத்தணியில் தற்காலிக பட்டாசு கடை அமையும் இடங்களில் அதிகாரிகள் ஆய்வு: உரிமையாளர்களுக்கு கடும் நிபந்தனை appeared first on Dinakaran.
