மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தில் நவராத்திரி விழா தொடங்கியது: பங்காரு அடிகளார் தீபம் ஏற்றி வைத்தார்

சென்னை: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. நவராத்திரி அகண்ட தீபத்தை பங்காரு அடிகளார் ஏற்றி வைத்தார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா 11 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி விழா புரட்டாசி மகாளய அமாவாசை தினமான நேற்று மிக விமரிசையாக தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியையொட்டி நேற்று அதிகாலை 3 மணியளவில் மங்கல இசை முழங்க ஆதிபராசக்தி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. காலை 11 மணியளவில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் வந்த பங்காரு அடிகளாருக்கு சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் பாத பூஜை செய்து அவரை வரவேற்றனர். பின்னர் பங்காரு அடிகளார் சித்தர் பீடத்தை வலம் வந்து கருவறையில் உள்ள ஆதிபராசக்தி அம்மனுக்கு தீபாராதனை காட்டி கருவறையில் வைக்கப்பட்டிருந்த நவராத்திரி அகண்ட தீபத்தை ஏற்றி வைத்தார். பின்னர் தெய்வங்கள் வேடம் அணிந்த சிறுவர், சிறுமியர்கள், பெண்கள் ஆகியோர் ஏற்றி வைக்கப்பட்ட அகண்ட தீபத்துடன் சித்தர் பீடத்தை வலம் வந்து கருவறையில் வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட அகண்டு தீபத்தில் முக்கூட்டு எண்ணெய் ஊற்றி ஆதிபராசக்தி அம்மனை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் புரட்டாசி மகாளய அமாவாசை தினமான நேற்று பங்காரு அடிகளார் பொது வேள்வியை தொடங்கி வைத்தார். இந்த நவராத்திரி விழாவானது நேற்று தொடங்கி வரும் 24ம் தேதி வரை தொடர்ந்து 11 நாட்கள் நடக்கும். ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் காப்புகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெறும், மேலும் லட்சார்ச்சனையும் நடக்கும்.

இந்த நிகழ்ச்சியில் ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் தேவி ரமேஷ், ஆதிபராசக்தி மருத்துவமனை இயக்குனர் ரமேஷ், தலைமைச் செயல் அதிகாரி வழக்கறிஞர் அகத்தியன், ஆதிபராசக்தி கல்விக்குழும இயக்குனர்கள் ஆஷா அன்பழகன், லேகா செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

The post மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தில் நவராத்திரி விழா தொடங்கியது: பங்காரு அடிகளார் தீபம் ஏற்றி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: