பவானி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

கோபி: கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் 1300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபி அருகே கொடிவேரி அணை உள்ளது. இந்த அணை பவானி ஆற்றின் குறுக்கே சுமார் 700 ஆண்டுக்கு முன் கட்டப்பட்டது. சுமார் 500 மீட்டர் நீளம், 15 அடி உயரம் கொண்டது. இதில் இருந்து அருவி போல் தண்ணீர் கொட்டுவதால் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக குளிக்க முடியும். இதனால், குறைந்த செலவில் விடுமுறையை கழிக்க ஒவ்வொரு அரசு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கொடிவேரி அணைக்கு வருகின்றனர்.

விடுமுறையை தவிர்த்து மற்ற நாட்களிலும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணைக்கு வருகின்றனர். இந்நிலையில் பவானி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், கொடிவேரி அணையில் 1300 கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது. அணையின் பாதுகாப்பு எல்லையை தாண்டி தண்ணீர் வெளியேறி வருவதால், அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு நீர்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர்.

The post பவானி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை appeared first on Dinakaran.

Related Stories: