மண்வளத்தை பாதுகாக்க 50% மானியத்தில் உயிர் உரங்கள்

மதுரை, அக். 4: அரசு மானிய விலையில் கிடைக்கும் உயிர் உரங்களை பயிர்களுக்கு இடுவதன் மூலம் சாகுபடி செலவு குறைவதோடு மண்வளம் பாதுகாக்கப்படுவதாக என வேளாண் உதவி இயக்குநர் ராமசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இயற்கையாகவே மண்ணில் காணப்படும் அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்போபாக்டீரியம் போன்றவை நைட்ரஜனை வளிமண்டல மண்ணில் நிலைநிறுத்தியும் அங்கககார்பன் சத்தை அதிகரிக்கும் பணியையும் செய்கின்றன.

தற்போது மண்ணில் அங்கக கார்பன் சத்து 0.2 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளதால் பயிர் மகசூலும் குறைகிறது. மண்ணில் வளத்தை அதிகரிக்க உயிர் உரங்கள் அவசியமாக உள்ளது. அசோஸ்பைரில்லம் நுண்ணுயிரி வளிமண்டலத்தில் நைட்ரஜன் சத்தை செடிகளிலும் மண்ணிலும் நிலைநிறுத்தி பயிர்களில் வளர்ச்சியை அதிகரிக்கிறது. இதனை நெல் உள்பட பிற பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.

ரைசோபியம் பாக்டீரியா பயறு வகைப்பயிர்களில் வேர்ப் பகுதிகளில் வாழ்ந்து வளி மண்டல நைட்ரஜனை செடிகளின் வேர்முடிச்சுகளில் சேமித்து வைக்கிறது. பாஸ்போபாக்டீரியா மண் துகளிலுள்ள பாஸ்பரஸ் சத்தை விடுவித்து பயிருக்கு கிடைக்க செய்கிறது. இந்த உயிர் உரங்கள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. ரசாயன உரங்களின் அளவில் 25 முதல் 50 சதவீதம் வரை குறைத்து உயிர் உரங்களை மண்ணில் இடுவதன் மூலம் உரச்செலவை குறைத்து மண்வளத்தை அதிகரிக்கலாம். இது குறித்து மேலும் விவரங்களுக்கு அந்தந்த பகுதியில் உள்ள வேளாண் அலுவலகத்தை அணுகலாம் என்றார்.

The post மண்வளத்தை பாதுகாக்க 50% மானியத்தில் உயிர் உரங்கள் appeared first on Dinakaran.

Related Stories: