பயிற்சி ஆட்டங்களில் விளையாடும் மழை

திருவனந்தபுரம்: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் தொடர்ந்து மழை காரணமாக பாதிக்கப்பட்டு வருவதால், வீரர்களும் ரசிகர்களும் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.திருவனந்தபுரம் கிரீன்பீல்டு ஸ்டேடியத்தில் நேற்று நடந்த பயிற்சி போட்டியில் நியூசிலாந்து – தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்று பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன் குவித்தது. தொடக்க வீரர் கான்வே அதிகபட்சமாக 78 ரன் (73 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினார்.

கேப்டன் கேன் வில்லியம்சன் 37 ரன் எடுத்து காயம் காரணமாக ஓய்வு பெற்றார். டாம் லாதம் 52, கிளென் பிலிப்ஸ் 43, சாப்மேன் 20, டேரில் மிட்செல் 25 ரன் எடுத்தனர். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் லுங்கி என்ஜிடி, மார்கோ ஜான்சென் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா 37 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன் எடுத்த நிலையில், கனமழை கொட்டியதால் ஆட்டம் தடைபட்டது. ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் கோல்டன் டக் அவுட் ஆனார். வாண்டெர் டுஸன் 51, கேப்டன் மார்க்ரம் 13, கிளாஸன் 39 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.

டி காக் 84 ரன் (89 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்), டேவிட் மில்லர் 18 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசி. பந்துவீச்சில் டிரென்ட் போல்ட் 2, சான்ட்னர், சோதி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். கவுகாத்தியில் வங்கதேசம் – இங்கிலாந்து அணிகள் மோதிய பயிற்சி ஆட்டமும் நேற்று மழை காரணமாக பாதிக்கப்பட்டது. இதனால் தலா 37 ஓவர்கள் கொண்ட போட்டியாக அறிவிக்கப்பட்ட நிலையில், முதலில் பேட் செய்த வங்கதேசம் 37 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன் எடுத்தது. டன்ஸித் ஹாசன் 45, மெஹிதி ஹசன் மிராஸ் 74, மகமதுல்லா 18, தஸ்கின் அகமது 12* ரன் எடுத்தனர்.

இங்கிலாந்து பந்துவீச்சில் ரீஸ் டாப்லி 3, டேவிட் வில்லி, அடில் ரஷித் தலா 2, சாம் கரன், மார்க் வுட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். மழை குறுக்கிட்டதால் இங்கிலாந்து அணிக்கு 37 ஓவரில் 197 ரன் எடுத்தால் வெற்றி என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. இப்படி பெரும்பாலான பயிற்சி ஆட்டங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டு வருவது, உலக கோப்பையில் களமிறங்க உள்ள அணிகளின் வீரர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

The post பயிற்சி ஆட்டங்களில் விளையாடும் மழை appeared first on Dinakaran.

Related Stories: