சென்னை விமானநிலையத்தில் விமானி இல்லாததால் குவைத் விமானம் தாமதம்: 187 பயணிகள் தவிப்பு

மீனம்பாக்கம்: சென்னை சர்வதேச விமானநிலையத்தில் இன்று காலை குவைத் செல்லும் விமானத்தை இயக்க விமானி இல்லாததால், சுமார் இரண்டரை மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டு சென்றது. அதில் செல்ல வேண்டிய 187 பயணிகள் ‘இந்த விமானமும் ரத்து செய்யப்படுமோ?’ என்ற பரிதவிப்புடன் காத்திருந்தனர். குவைத் நாட்டிலிருந்து நாள்தோறும் காலை 7 மணியளவில் பயணிகளுடன் குவைத் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்து சேரும். பின்னர் இங்கிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு காலை 8.10 மணியளவில் மீண்டும் அந்த விமானம் குவைத் நாட்டுக்குப் புறப்பட்டு செல்வது வழக்கம். இந்நிலையில், இன்று காலை 7 மணியளவில் வழக்கம் போல் குவைத்திலிருந்து சென்னை சர்வதேச விமானநிலையத்துக்கு குவைத் ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளுடன் வந்து சேர்ந்தது.

இந்த விமானத்தில், குவைத் செல்ல வேண்டிய 187 பயணிகள், சென்னை சர்வதேச விமானநிலையத்தில் அதிகாலை நேரத்தில் அனைத்து சோதனைகளும் முடிந்து, விமானத்தில் ஏறுவதற்குத் தயார்நிலையில் காத்திருந்தனர். இந்நிலையில், குவைத்திலிருந்து இன்று காலை சென்னை வந்த குவைத் ஏர்லைன்ஸ் விமானத்தை ஓட்டிவந்த விமானி, துணை விமானி ஆகிய இருவரும் ஓய்வுக்கு சென்றுவிட்டனர். இங்கு ஏற்கெனவே ஓய்வில் இருந்த தலைமை விமானி, குவைத் ஏர்லைன்ஸ் விமானத்தை இயக்குவதற்கு குறிப்பிட்ட நேரத்தில் வரவில்லை. இதனால் பயணிகள் விமானத்தில் ஏற்றப்படாமல், விமான நிலையத்திலேயே உட்கார வைக்கப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் தலைமை விமானியை குவைத் ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரிகள் தொடர்பு கொண்டனர். அதன்பின் நீண்ட நேரம் கழித்து தலைமை விமானி வந்து, தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் தாமதமாக வந்துள்ளதாக கூறியுள்ளார்.

அவரது உடல்நிலையை விமான நிலைய மருத்துவ அதிகாரிகள் பரிசோதித்தனர். பின்னர் அவரது உடல்நிலை சீராக இருந்ததால், அவரை விமானத்தை இயக்குவதற்கு மருத்துவ குழுவினர் அனுமதியளித்தனர். பின்னர் குவைத் செல்லும் விமானத்தில் தலைமை விமானி ஏறி தயாரானதும், அதில் செல்லவேண்டிய 187 பயணிகளும் ஏற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து, சுமார் இரண்டரை மணி நேரம் தாமதமாக, இன்று காலை 10.40 மணியளவில் சென்னையில் இருந்து குவைத் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்றது. தலைமை விமானியின் வருகை தாமதமாக, இன்று காலை குவைத்துக்கு சுமார் இரண்டரை மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டு சென்றது. இதனால் அதில் செல்ல வேண்டிய 187 பயணிகளும், இன்று அதிகாலை பிராங்க்பர்ட் செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டதை போல், இந்த குவைத் விமானமும் ரத்தாகி விடுமோ என்ற அச்சத்தில் பரிதவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

The post சென்னை விமானநிலையத்தில் விமானி இல்லாததால் குவைத் விமானம் தாமதம்: 187 பயணிகள் தவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: