ரஷ்யா விண்வெளி மையத்தில் தமிழக அரசு பள்ளி மாணவர்கள்

பட்டுக்கோட்டை: கொரோனா காலத்தில் முடங்கி கிடந்த அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்தவும், அவர்களது திறமையை வெளிப்படுத்தவும் பல்வேறு நிகழ்ச்சிகளை அரசு கல்வி நிறுவனங்களும் மற்றும் தனியார் நிறுவனங்களும் தொடர்ந்து செய்தன. அந்த வகையில் ராக்கெட் சயின்ஸ் என்ற தலைப்பில் ஆன்லைன் பயிற்சி திட்டம் தனியார் நிறுவனம் சார்பில் கடந்தாண்டு ஜனவரி 26ம்தேதி தொடங்கப்பட்டது.

பிரமோஸ் ஏவுகணை திட்ட இயக்குநர் விஞ்ஞானி சிவதாணுபிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பில் தமிழகத்தில் உள்ள 56 அரசு பள்ளிகளை சேர்ந்த 500 மாணவர்கள் பங்கேற்றனர். 500 நாட்களை கடந்து நடந்த இந்த பயிற்சியின் முடிவில், 75 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த ரஷ்ய பயணத்திற்கு தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இருந்து 8 மாணவிகள், மதுக்கூர் அரசு பள்ளியிலிருந்து ஒரு மாணவர், திருச்சியை சேர்ந்த 2 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பட்டுக்கோட்டை மாணவிகள் கலைமகள், கௌசல்யா, மகாதேவி, மதுக்கூர் மாணவர் சந்தோஷ் மற்றும் இவர்களுடன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியை சத்யா ஆகியோர் நேற்றுமுன்தினம் இரவு ரஷ்யா புறப்பட்டனர். பட்டுக்கோட்டையில் இருந்து ரயிலில் புறப்பட்ட இவர்கள், சென்னை வந்து விமான நிலையம் சென்றனர். இதேபோல் தேர்வு செய்யப்பட்ட அனைத்து மாணவர்களும் நாளை (30ம்தேதி) அதிகாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சார்ஜா செல்கின்றனர். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் ரஷ்யா செல்கின்றனர்.

The post ரஷ்யா விண்வெளி மையத்தில் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் appeared first on Dinakaran.

Related Stories: