திருவாரூர், செப். 28: திருவாரூர் மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி 3ம் கட்டமாக அடுத்த மாதம் 9ம் தேதி முதல் துவங்கப்படவுள்ளதாக கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
இந்தியா முழுவதும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு கர்ப்பகாலத்தில் வழங்கப்படும் தடுப்பூசி சேவைகளை மேம்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும், கர்ப்பிணி தாய்மார்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த தடுப்பூசிகள் செலுத்தும் பணியில் முழுமையாக இலக்கீட்டினை அடைய மிஷின் இந்திர தனுஷ் 5.0 என்ற சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மூலம் மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும், சிறப்பு கவனம் தேவைப்படும் இடங்களை கண்டறிந்து முதல் மற்றும் 2ம் சுற்று தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது. இந்நிலையில் 3ம் கட்டமாக அடுத்த மாதம் (அக்டோபர்) 9ம் தேதி முதல் 14ம் தேதி வரையில் நடைபெற்றது.
இதுதொடர்பாக கலெக்டர் தலைமையில் சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துறை, பள்ளிக்கல்வித்துறை, நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் இந்திய குழந்தைகள் மருத்துவ சங்கம் ஆகியோர் பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் இந்த முகாமானது பொது மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே உள்ள துணைசுகாதார செவிலியர் மற்றும் நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் இந்த தடுப்பூசி முகாம்களை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டு முழுமையாக தடுப்பூசி சேவைகளை பெற்று பயனடையலாம். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.
The post 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கர்ப்பிணிகளுக்கு 3ம் கட்ட தடுப்பூசி பணி துவக்கம் appeared first on Dinakaran.