காஞ்சிபுரம், செப்.28: காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், ‘வடகிழக்கு பருவமழை 2023’ முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை தாங்கினார். அப்போது, அவர் பேசியதாவது: கடந்த ஆண்டுகளில் பெய்த பெருமழையின்போது பாதிக்கப்பட்ட பகுதிகளை, 3 மிக அதிகம் பாதிக்கப்படும் பகுதிகள், 21 அதிகம் பாதிக்கப்படும் பகுதிகள், 26 நடுத்தர மற்றும் 22 குறைவாக பாதிக்கப்படும் பகுதிகள் என கண்டறியப்பட்டு மொத்தமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 72 பாதிக்கப்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், துறைவாரியாக மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் இடர்கள் ஏற்படின் மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் விரைவில் முடிக்குமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.
மிக அதிகமாக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மூத்த குடிமக்கள், கருவுற்ற தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் விவரங்களை முன்கூட்டியே பட்டியலிட்டு, மழை பொழிவின்போது அவர்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு அழைத்து வந்து தங்க வைக்க தாயர் நிலையில் இருக்க வேண்டும். அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பாதுகாப்பு வசதிகளை முன்கூட்டியே ஆய்வு செய்து உறுதி படுத்திக்கொள்ள வேண்டும்.
வெள்ளத்தினால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க நிவாரண முகாம்கள் கண்டறியப்பட்டு, முகாம்களில் தேவைப்படும் அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சார வசதிகள், வேட்டி மற்றும் சேலைகள், பாய், தலையணை, பெட்ஷீட், மளிகை பொருட்கள் இருப்பு, உணவு சமைப்பதற்கான இடம், சமையலர், சிலிண்டர் மற்றும் எரிவாயு பொருட்கள், மெழுகுவர்த்தி, டார்ச் லைட், ஜெனரேட்டர்கள் மற்றும் கழிப்பறை வசதிகள் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்.நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து மழைநீர் வடிகால்கள், பாலங்கள் ஆகியவற்றை தூர்வாரும் பணியினை பருவமழைக்கு முன்னதாகவே முடிக்குமாறு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.
வெள்ளத்தினால் பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள பாலங்கள் மற்றும் சிறு பாலங்கள் சுத்தம் செய்யும் பணி, மழைநீர் வடிகால்கள் அமைத்தல், விரிவு படுத்துதல், உபரிநீர் கால்வாய்கள், நீர்வரத்து கால்வாய்கள் ஆகியவற்றினை தூர்வாருதல் போன்ற பணிகள் மேற்கொள்ள பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத் துறை, பேரூராட்சித்துறை, நகராட்சி நிருவாகம் ஆகிய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிருவாகம், பேரூராட்சிகள் துறை மற்றும் பல்வேறு துறைகளின் மூலமாக மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க போதிய உபகரணங்கள் மற்றும் உயிர்காக்கும் கருவிகளை இருப்பு வைக்க வேண்டும். மேலும் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் (ம) பொதுமக்கள் ஆகியோர் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொ) கணேஷ், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிக்கு தேவைப்படும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களான ஜெனரேட்டர், மரம் அறுக்கும் இயந்திரம், மோட்டார் பய்ப்புகள், மணல் மூட்டைகள், சவுக்கு கம்புகள், மின் கம்பங்கள், ஆம்புலன்ஸ், ஜெசிபி இயந்திரம், ரப்பர் படகுகள் மற்றும் மிதவைப்படகுகள், பாதுகாப்பு காவலர்கள், பாதுகாப்பு கவசங்கள் மற்றும் டார்ச் லைட் ஆகியனவற்றை போதுமான அளவில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பாம்பு பிடிப்பவர்கள், நீச்சல் வீரர்கள், தன்னார்வலர்கள், என்சிசி, என்எஸ்எஸ், தொண்டு நிறுவன தன்னார்வலர்கள் ஆகியோருகளையும் தயார் நிலையில் வைத்திட வேண்டும்.நியமிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
உயிர் காக்கும் மருந்துகள்
அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அவசர தேவைக்கான மருந்துகள், உயிர்காக்கும் மருந்துகள் உள்ளிட்டவைகளும், கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள் உள்ளிட்ட பொருட்களையும், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களையும் முன்கூட்டியே கொள்முதல் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். மொபைல் நிறுவனங்களில் உயர்கோபுரங்கள், தகவல் தொழில்நுட்பங்கள் ஆகியவை செயல்படும் நிலையில் உள்ளதா என்பதை சார்நிலை அலுவலர்கள் உறுதிபடுத்திக்கொள்ள
வேண்டும்.
மண்டல குழுக்கள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின்போது பாதிக்கப்படும் பகுதிகளில் மீட்பு பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு, 11 துறையை சார்ந்த அலுவலர்களை கொண்டு 21 மண்டல குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குழுக்களின் பணிகளை கண்காணிக்க, 21 துணை கலெக்டர்க நிலையிலான குழுத்தலைவர்கள், துணை குழுத்தலைவர்கள், தொழில்நுட்ப அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
The post வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசர தேவைக்கான உபகரணங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்: அனைத்துத்துறை அதிகாரிகளுக்கு, கலெக்டர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.
